Wednesday 19 November 2014

தக்காளி கூடைக்கு ரூ.100 அதிகரிப்பு; வரத்து குறைவால் கொள்முதலில் போட்டி

Advertisement

பதிவு செய்த நாள்

19நவ
2014 
23:22
கோவை : மார்க்கெட்களில், 70 சதவீத தக்காளி வரத்து திடீரென குறைந்ததால், காய்கறி மார்க்கெட்களில் ஒரு கூடை நாட்டு ரக தக்காளிக்கு, 100 ரூபாய் விலை கூடியது.

கோவை காய்கறி மார்க்கெட்களில் நடப்பு ஆண்டில் தக்காளிக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் தக்காளி சாகுபடி குறைந்திருந்ததால், மார்க்கெட்களில் தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தது. தொடர்ந்து, நடப்பு ஆண்டில் மற்ற காய்கறிகளின் சாகுபடியைக் காட்டிலும், தக்காளி சாகுபடிக்கு விவசாயிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.இதனால், நடப்பு ஆண்டில் கோவை, சுந்தராபுரம், கிணத்துக்கடவு, க.க.சாவடி, நாச்சிபாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் காய்கறி மார்க்கெட்களுக்கு தக்காளி வரத்து அதிகமாக இருந்தது. எதிர்பாராத விளைச்சலால் வரத்து அதிகமானது. அனைத்து பகுதிகளிலும் தக்காளி கிடைத்ததால், குறிப்பிட்ட மார்க்கெட்களில் ஏலம் எடுக்க வியாபாரிகள் குறைந்தளவே வந்தனர். இதனால், தக்காளிக்கு கூடுதல் விலை கிடைக்காமல் போனது.

இச்சூழலில், வடமேற்கு பருவமழை துவங்கியதால், தக்காளி சாகுபடி நிலங்களில் தண்ணீர் தேங்கி, செடிகள் அழுகின. இதனால், செடிகளில் பறிக்கப்படாமல் இருந்த பழங்கள், காய்கள் அழுகி, விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தின.இதனால், 70 சதவீத தக்காளி செடிகள் காய்ப்பிலேயே பறிக்கப்பட்டு, சாகுபடி நிலங்கள் சுத்தப்படுத்தப்பட்டன. கடந்த மூன்று நாட்களாக மார்க்கெட்களுக்கு வரும் தக்காளியின் அளவு மிகவும் குறைந்து, 30 சதவீத அளவே ஏலத்துக்கு வருகிறது. இச்சூழலில், வியாபாரிகள் வருகை அதிகரித்திருந்தது. இவர்களுக்குள் ஏற்பட்ட போட்டியால், தக்காளிக்கு கிராக்கி ஏற்பட்டு, விலையும் எதிர்பாராத அளவு அதிகரித்தது.

கடந்த இரண்டு நாட்களில், 14 - 17 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளிக்கு, கூடுதலாக, 100 ரூபாய் விலை கூடியுள்ளது. 120 - 140 ரூபாய் அளவுக்கு இருந்த விலை நிலவரம், தற்போது 220 - 230 ரூபாய் என, உயர்ந்துள்ளது. குறிப்பாக நாட்டு ரக தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் கேட்டபோது,'நாட்டு தக்காளியில் புளிப்புச்சுவை அதிகமாக உள்ளதால், ஏலம் எடுப்பவர்கள் கூடுதல் விலை வைத்து, எடுத்துச் செல்கின்றனர். வரத்து குறைந்ததாலும், வரவேற்பு கூடியுள்ளதாலும் அடுத்து வரும் நாட்களில் நாட்டுத்தக்காளியின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது' என்றனர்.


Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=1118876

No comments:

Post a Comment