Monday 22 December 2014

ஆவினில் கூடுதலாக 5 லட்சம் லி., பால் கொள்முதல்; சேலத்தில் அமைச்சர் ரமணா வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

23டிச
2014 
07:37
சேலம் : ""சேலம் ஆவின் பால்பண்ணையில், தற்போதுள்ள கொள்முதலை காட்டிலும், கூடுதலாக, ஐந்து லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய வேண்டும்,'' என, சேலத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர் ரமணா வலியுறுத்தினார்.

சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 1,300 பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றின் மூலம், நாள் ஒன்றுக்கு, 4.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இரண்டு மாவட்டத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கான ஆய்வுக் கூட்டம், சேலம் ஃபேர்லண்ட்ஸில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கல்யாண மண்டபத்தில் நடந்தது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ரமணா பங்கேற்று பேசியதாவது:கடந்த, நவ.,1ம் தேதி முதல், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தேவையான நடவடிக்கைகள், அரசு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, பசும்பால் விலையை, 23 ரூபாயில் இருந்து, ஐந்து ரூபாய் உயர்த்தி, 28 ரூபாயாகவும், எருமைப்பால், 31 ரூபாயில் இருந்து, நான்கு ரூபாய் உயர்த்தி, 35 ரூபாயாகவும் வழங்கப்படுகிறது.

பால் கொள்முதலை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை, ஒவ்வொரு சங்கத்தினரும் மேற்கொள்ள வேண்டும். தற்போதுள்ளதை விட, கூடுதலாக, ஐந்து லட்சம் லிட்டர் பால், சேலம் ஆவின் பால் பண்ணை நிர்வாகம் கொள்முதல் செய்ய வேண்டும்.தமிழக அரசு, தரமான கறவை மாடுகள் வாங்குவதற்கு, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், சமச்சீர் திட்டத்தை உருவாக்கியுள்ளது. பால் உற்பத்தியை அதிகரிக்க, ஒரு கோடி ரூபாய் செலவில், தீவன உற்பத்தி திட்டம், 20 ஆயிரம் லிட்டர் பாலை பதப்படுத்த, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், சூரியசக்தி மின் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளது. இவற்றின் மூலம், பால் உற்பத்தி அதிகரிப்பதுடன், விவசாயிகளும் பயனடைவர்.இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து, சேலம் ஆவின் பால்பண்ணைக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டார். பால் பதப்படுத்தும் மையம், பாலின் தரம், பாக்கெட்டின் நிலை, வெண்ணெய், நெய், கூல்டிரிங்ஸ், இனிப்பு வகைகள் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டார்.மேலும், 92.48 லட்சம் ரூபாய் மதிப்பில், 50 ஆயிரம் லிட்டர் பாலை பதப்படுத்தும், குளிர்பதன கிடங்கை, அமைச்சர் திறந்து வைத்தார். 1.58 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும், ஒரு லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும், மற்றொரு கிடங்கை அவர் ஆய்வு செய்தார்.ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களுடைய கோரிக்கையை மனுவாக அளித்தனர். ஆய்வின்போது, ஆவின் பொதுமேலாளர் சாந்தி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், பால் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Source: 

No comments:

Post a Comment