Saturday 27 December 2014

9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பு: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் வரும் மூன்று மாதங்களுக்குத் தேவையான 9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. சென்னை தங்கசாலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது விநியோகத் திட்ட கிடங்கில், உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியது:
பொது விநியோகத் திட்ட கிடங்குகளிலும், இந்திய உணவுக் கழக கிடங்குகளிலும் தமிழகத்தின் மூன்று மாத தேவையான 9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளது. இதில் 2 லட்சம் மெட்ரிக் டன் பச்சரிசி உள்ளது.
மாநிலம் முழுவதும் இலவச அரிசி பெற தகுதியுள்ள 1 கோடியே 87 இலட்சத்து 41 ஆயிரத்து 112 குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பொது விநியோகத் திட்டம், அன்னயோஜனா திட்டங்களின் கீழ் குடும்ப அட்டைகளுக்கு உரிய அரிசி முழுவதும் வழங்கும் வகையில், மாதத்துக்கு சராசரியாக 3 இலட்சத்து 88 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேவைக்கேற்றபடி கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மாத இறுதியில் கடைகளில் கட்டாயமாக அரிசியை இருப்பு வைக்க வேண்டுமென்று அறிவுரைகள் ஏதும் வழங்கப்படவில்லை. அட்டைதாரர்களுக்குரிய அரிசியை வழங்காமல், இருப்பு வைக்க வேண்டியதில்லை.
பொது விநியோகத் திட்டத்தின் தேவைக்காக மத்திய தொகுப்பிலிருந்து மாதந்தோறும் 2 லட்சத்து 96 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ரூ.3 முதல் ரூ.8.30 வரையிலும்,
மீதமுள்ள தேவைக்கு வெளிச்சந்தை அரிசி திட்டத்தின் கீழ் கிலோ ரூ.19.50 என்ற விலையிலும், இந்திய உணவுக் கழகத்திடமிருந்து அரிசி பெறப்படுகிறது. தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லிருந்து பெறப்படும் அரிசியும் பொது விநியோகத் திட்டத் தேவைக்கு ஈடு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் சத்துணவு, அன்னபூர்ணா, மாணவர் விடுதிகள் ஆகியவற்றின் தேவைக்கென இந்திய உணவுக் கழகத்திடமிருந்து ஆண்டுக்கு 2 இலட்சத்து 5 ஆயிரம்
மெட்ரிக் டன் அரிசி தனியாகப் பெறப்படுகிறது. எனவே, ஏனைய திட்டங்களுக்கு பொது விநியோகத் திட்ட அரிசி பயன்படுத்தப்படுவதில்லை.
இந்த ஆய்வில் உணவுத்துறை முதன்மை செயலாளர் முகம்மது நசீமுத்தின், உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் சூ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Source: 

No comments:

Post a Comment