Saturday 27 December 2014

மழையால் தென்னை விவசாயிகள்... மகிழ்ச்சி:தேங்காய் விலை குறைய வாய்ப்பு

பதிவு செய்த நாள்

26டிச
2014 
21:14
கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தென்னந் தோப்புகளில் ஈரப்பதம் நிலவுகிறது. இதனால் இந்த ஆண்டு அதிகளவில் தேங்காய் விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையோர பகுதிகளான கீழக்கரை, காஞ்சிரங்குடி, திருப்புல்லாணி, சேதுக் கரை, முத்துப்பேட்டை, பெரிய பட்டினம், வண்ணாங்குண்டு, தினைக் குளம் உள்ளிட்ட பகுதிகளில் 450 ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்புகள் உள்ளன. ஒரு ஏக்கருக்கு 80 மரங்கள் வீதம் சுமார் 50 ஆயிரம் தென்னை மரங்கள் விளைச்சல் தரும் நிலையில் உள்ளன. இப்பகுதிகளில் தென்னை மரங்களுக்கு இயற்கை உரங்களான கொளுஞ்சி, ஆட்டுக்கழிவு, பஞ்சகவ்யம், பனை ஓலை, மண்புழு உரம் ஆகியவற்றையே தோப்பு உரிமையாளர்கள் அதிகம் பயன்படுத்துவதால், தேங்காய்களில் பருப்பு பெரியதாக இருக்கும்.
மேலும், 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து வரவழைக்கப் பட்டு, கீழக்கரை பகுதியில் அதிகம் விளைவிக்கப்படும் யாழ்ப்பாணம் தேங்காய்கள் மிகப்பெரியதாகவும், அதிக எண்ணை சத்துடனும், சமையலுக்கு ருசியாகவும் இருப்பதால், வெளி மாவட்டங்களுக்கு அவை பெருமளவில் லாரிகளில் அனுப்பப்படுகிறது.

தேங்காய் வியாபாரி, கீழக்கரை திருச்செல்வம் கூறுகையில், ""இந்தப் பகுதியில் தற்போது பெய்த பருவமழையால் தென்னந்தோப்புகளில் ஈரப்பதம் உள்ளது.
இதனால் இந்த வருடம் தேங்காய் விளைச்சல் நன்கு இருக்கும். இன்னும் 4 மாதங்கள் கழித்து தேங்காய் வரத்து அதிகளவு இருக்கும் என்பதால், விலை சற்று குறையும். தற்போது கிலோ ரூ.20 வீதம் காங்கேயம், வெள்ளக் கோயில், விருதுநகர், மதுரை, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். அதிக விளைச்சல் ஏற்படும்போது விலை, மேலும் குறைய வாய்ப்புள்ளது, என்றார்.

Source: 

No comments:

Post a Comment