Monday 15 December 2014

சம்பா நெல் நல்ல மகசூல் கிடைக்கும் என எதிர்பார்ப்பு ! : இலக்கை விஞ்சி கொள்முதல் செய்ய முடிவு


பதிவு செய்த நாள்

16டிச
2014 
00:35
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா நெல் விளைச்சல் அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அரசு கொள்முதல் நிலையங்களை கூடுதலாக துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இந்த ஆண்டு 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. நீர் ஆதாரமாக உள்ள மேட்டூர் அணை, வீராணம் ஏரி ஆகியவற்றில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதற்கிடையே இம் மாவட்டத்தில் சீரான மழை பெய்து வருகிறது. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கன மழை, வெள்ளம், புயல் சேதம் போன்றவை ஏதும் ஏற்படவில்லை. பூச்சி தாக்குதல் பல இடங்களில் இருந்த போதும் அவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சலும், பாய்ச்சலும்
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எதிர்பாராத விதமாக திடீரென துவங்கியது. கனமழைக்கு பதிலாக தொடர் மழையாக பெய்து வந்தது. இதனால் மழைநீர் ஒரேடியாக ஓடி கடலில் கலக்காமல், பூமியில் நன்றாக உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. ஆண்டு தோறும் பெய்ய வேண்டிய 1,315மி.மீ., மழையில் இந்த ஆண்டு இதுவரை 1,100 மி.மீ., மட்டுமே மழை பெய்துள்ளது. கனமழை பெய்யக்கூடிய நவம்பர் மாதத்தில் 400 மி.மீ., மழைக்கு 209 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. இடைவெளி விட்டு வெய்யிலும், மழையுமாக பெய்ததால் நெல்லுக்கு ஏற்றளவில் காய்ச்சலும், பாய்ச்சலுமாக இருந்தது. இதனால் இந்த ஆண்டு பல வட்டங்களில் நல்ல விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல இடங்களில் தற்போதே நெல் அறுவடைக்கு தயாராகி வந்துள்ளது.
நெல் கொள்முதல்
கடந்த ஆண்டில் நெல் விளைச்சல் குறைந்ததாலும், வியாபாரிகள் அதிகளவில் நெல்லுக்கு விலை கொடுத்ததாலும் அரசு குறைவான நெல்லையே கொள்முதல் செய்ய முடிந்தது. இதனால் கடந்தாண்டு 44 ஆயிரம் டன் கொள்முதல் செய்து இலக்கை எட்ட முடியாமல் போனது. இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம் இருக்கும் என கருதி அரசு நிர்ணயித்த இலக்கை விட கூடுதலாக கொள்முதல் செய்ய ஆயத்தமாகி வருகிறது. எப்படியும் இந்த ஆண்டு ஒரு லட்சம் டன்னுக்கு மேல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். வரும் புத்தாண்டில் முதல் கட்டமாக 157 நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Source: 

No comments:

Post a Comment