Tuesday 23 December 2014

நவீன தொழில்நுட்பம்

பதிவு செய்த நாள்

24டிச
2014 
00:00
எரிசக்தி காடுகள் : மரம் ஒரு எரிசக்தி நிலையமாகும். நம் நிலத்தில் இப்போது பத்தில் ஒரு பகுதிக்குத் தான் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் தேவைப்படும் அளவோ மூன்றில் ஒரு பங்கு ஆகும். தொன்றுதொட்டு தாவரங்களே கால்நடைகளை வளர்த்து வருகின்றன.
கால்நடைகள் உண்ணும் தாவரம் எதுவானாலும் அதில் குறைந்தது 10 சத அளவிலாவது புரதமும், தக்க அளவில் வைட்டமின்களும், சுண்ணாம்புச் சத்தும் இருக்கும். அகத்தி, சுபாபுல் ஆகியவற்றின் தழைகள் புரதச்சத்துடையதால் பால் கறவையை அதிகரிக்கும்.
பண்ணை நிலத்தின் பயிருடன் சேர்த்து மரங்களை வளர்ப்பது கால்நடைகள் வளர்ப்பை மேற்கொள்வது ஆகிய ஒருங்கிணைந்த வேளாண் முறையைக் கடைப்பிடிப்பதற்கு உற்பத்தியை பன்மடங்காகப் பெருக்குவதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஆற்றலைப் பெறுவதற்கும் வேளாண் காடுகள் முறை உதவும்.
எரிசக்தி காடுகளுக்கு ஏற்ற மரங்கள் : குறைந்த காலத்தில் துரிதமாக வளர்ந்து கால்நடைத் தீவனம், எரிபொருள் மரக்கட்டை கூளைக்கொடுக்க்கூடிய உணவுப் பயிர்களுடன் ஒத்து வளரக்கூடிய மரங்களையே எரிசக்தி காடுகளுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேலமரம், சவுண்டல், கிளைரி சிடியா, கல்யாண முருங்கை போன்றவற்றை அடிக்கடி பசுந்தீவனத்திற்காக வெட்டினாலும் விரைவில் வளரக்கூடியதாகவும், கல்யாண முருங்கை, கிளைரிசிடியா, அகத்தி போன்ற காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து, மண்ணில் சேமித்து வைக்கக்கூடியதாகவும் உள்ள தைலமரம், சவுண்டல் போன்ற தரையின் ஆழ்மட்டத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை கிரகிக்கும் தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும்.
எரிசக்தி காடுகளின் பயன்கள் : விறகின் வெப்ப ஆற்றலைக் கொண்டு பல தொழிற்சாலைகளின் எரிசக்தி தேவையை நிறைவு செய்வதோடு மின் சக்தியாக மாற்றியும் பயன்படுத்தலாம். குஜராத்தில் கட்ச் பகுதியில் 4.4 டன் விறகை எரித்தால் ஒரு மெகாவாட் மின்சக்தி பெறலாம் என அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். கிராமப்புறங்களில் 10-15 கிராமங்களுக்கு 365 ஏக்கரில் சுபாபுல், அகத்தி, சவுக்கு, யூகாலிப்டஸ் ஆகிய மரங்களைப் பயிரிட்டு மின்சக்தி தேவையைப் பூர்த்தி செய்யலாம்.
அரசமரம் 14 ஆண்டுகளில் சுமார் 62 கிலோ கிராம் எரிபொருளைத் தருகிறது. சவுண்டல் மரங்களில் ஒருவகையான "ஹவாயின் ஜெயண்ட்' என்ற ரகம் விரைவில் வளரக்கூடிய திறன் கொண்டது.
பன்னோக்கு மரங்கள் : எரிபொருள், நார்பொருள் தீவனம், எண்ணெய்வித்து, உண்ணக்கூடிய பழங்கள் போன்ற பல நோக்கங்களுக்காக வளரக்கூடிய மரங்கள் பன்னோக்கு மரங்கள் எனப்படும்.
பசுந்தீவனங்கள் : பசுந்தீவனங்களில் உயிர்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் கலப்பு உணவின் தேவைகளை இலைகள் குறைக்கின்றன. ஐந்து லிட்டர் வரை பால் கறக்கும் ஒரு மாட்டிற்கு தேவையான பசும்புல் மட்டுமே அளித்து அதனை நன்கு வளர்க்க முடியும். இதற்கு கலப்பு தீவனம் எதுவும் தேவையில்லை. பசுந்தீவனத்தில் உள்ள கெரோட்டின் உயிர்ச்சத்து கால்நடைகளின் வைட்டமின் "ஏ' தேவையினை பூர்த்தி செய்கிறது.
வேளாண் பயிர்களோடு சுபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காப்புளி, அகத்தி, பூவரசு, வாகை போன்ற மரங்கள் தீவனத்தையும் எரிபொருளையும் சேர்த்து அளிக்கின்றன. இம்மரங்களை நிலங்களின் ஓரத்தில் வளர்த்தால் கால்நடை தீவனத்தோடு மண் அரிப்பைத் தடுத்து மண்வளத்தைப் பாதுகாக்க இயலும்.
தாவரங்களிலிருந்து தரமான நிறங்கள் : சுபாபுல், அகத்தி போன்ற மர இலைகளை வெயிலில் உலர வைத்து அரைத்து கோழித்தீவனத்தின் ஒரு பகுதியாக சேர்ப்பதன் மூலம் தீவனச்செலவு குறைவதோடு, முட்டையின் மஞ்சள் கரு அதிக மஞ்சள் நிறம் கொண்டதாக விளங்குகிறது.
கார்பன் சந்தை : எரிசக்தி காடுகளை உருவாக்குவதன் மூலம் கரித்தடத்தைக் குறைக்கலாம். கரித்தடம் என்பது ஒருபொருளை உற்பத்தி செய்வதற்கான ஒரு தனிமனிதனோ அல்லது நிறுவனமோ மொத்தமாக வெளியிடப்படும் நச்சு வாயுக்களின் அளவினை கரியமில வாயுவில் புவி வெப்பமாக்கும் காரணிக்கு இணையாகக் கணக்கிடப்படுவது ஆகும். மரம் வளர்ப்பின் மூலம் இந்த கரித்தடத்தை குறைத்து அதன் மூலம் உலகம் வெப்பமயமாதலும் குறைக்கப்படுகிறது. தகவல் : முனைவர்கள் சு.புகழேந்தி, ர.ஷாலினி, கு.பூபதி, சி.ராமஜெயம், மா.சிங்காரவேலு, உயிர்சக்தி துறை, வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 002. போன் : 0422 - 661 1276.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

No comments:

Post a Comment