Tuesday 9 December 2014

சின்ன சின்ன செய்திகள்


பதிவு செய்த நாள்

10டிச
2014 
00:00
பூச்சி, நோய்கள் தாக்குதல் பற்றிய சிறப்பு செய்திகள் :
சோளம் : மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ள சோளம் மற்றும் மக்காச்சோளம் பயிர்களில் சோளக்குருத்து ஈ, தண்டு துளைப்பான் மற்றும் களர் துளைப்பான் ஆகியவற்றின் தாக்குதலும், அடிச்சாம்பல் நோய் தாக்குதலும் பரவலாகக் காணப்படுகிறது. இத்தாக்குதலை 5 சதவீதம் வேப்பங்கொட்டைச்சாறு தெளித்து கட்டுப்படுத்தலாம். அல்லது 50 கிராம் கருவாட்டுத்தூளை தண்ணீர் தெளித்து ஒரு பாலிதீன் பையில் கட்டி, குண்டூசிகளால் துளையிட்டு ஒரு டப்பாவில் வைத்து மூடி நான்கு இடங்களில் தொங்க விட்டால் இந்த வாசனைக்கு கவரப்பட்டு வரும் பூச்சிகள் இறந்து விடும். பூஞ்சாணக் கொல்லியைத் தெளிப்பதன் மூலம் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

நிலக்கடலை : நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுத் தாக்குதல், வேர் அழுகல் நோய் மற்றும் டிக்கா இலைப்புள்ளி நோய் தாக்குதல் ஆகியவை காணப்படும். வரப்பு ஓரங்களில் ஓர் அடி அகல, ஆழத்தில் குழி எடுத்து அடுத்த நிலங்களுக்கு புழு செல்வதைத் தடுக்க வேண்டும். மாலையில் ஒரு மணி நேரம், காலையில் ஒருமணி நேரம் விளக்குப்பொறி வைத்து, தாய் அந்துப்பூச்சிகளை அழித்தால் புழுக்கள் வராது. அதிகமான நேரம் விளக்குப்பொறி வைத்தால் அதிக அளவில் நன்மை செய்யும் பூச்சிகள் கவரப்பட்டு இறந்து விடும். நோய்களைக் கட்டுப்படுத்த 250 கிலோ தொழு உரத்தில் இரண்டரை கிலோ சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் அல்லது டிரைகோ டெர்மோ விரிடியைக் கலந்து தூவ வேண்டும்.

பயறுவகைப் பயிர்கள் : பயறுவகைப் பயிர்களில் மஞ்சள் தேமல் நோயை உண்டாக்கும் அசுவினி, வெள்ளை ஈ, நீல வண்ணத்துப் பூச்சி ஆகியவை தாக்கக் கூடும். அதோடு சாம்பல் நோய், வேர் அழுகல் நோய் ஆகியவை வரலாம். விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிப்பதுடன் 5 சதவீத வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிக்கலாம். குறிப்பாக அசுவினி மற்றும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 40 கிராம் மீன் சோப்புடன், ஒரு மில்லி காதி சோப் கரைசலையும் சேர்த்து தெளிக்க வேண்டும்.

பருத்தி : 80 முதல் 90 நாட்கள் வயதுடைய மானாவாரி பருத்திச் செடிகளில் புகையிலைப்புழு மற்றும் புருடீஸ்யா புழுவின் தாக்குதலும், இலைக்கருகல் நோய், வேர் அழுகல் நோய், காய் அழுகல் நோய் ஆகியவற்றின் தாக்குதலும் காணப்படும். பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த விதைக்கும் போதே பொறிப்பயிராக ஆமணக்கு விதைக்க வேண்டும். ஆமணக்குச் செடிகளை பூச்சிகள் தாக்குவதைத் தெரிந்து கொண்டு தடுப்புமுறைகளை கையாள வேண்டும். விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளை அழிக்கலாம். 
மேலும் பருத்தி இனக்கவர்ச்சிப் பொறியை 10 மீட்டர் இடைவெளியில் 5 இடங்களில் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். நோய்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் அல்லது டிரைகோடெர்மா விரிடி இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து செடிகளின் முழுவதும் நனைவது போல தெளிக்க வேண்டும்.

கரும்பு : கரும்பு பயிரில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 4 முதல் 5 மாதங்களில் சாய்ந்த கரும்புகளில் இடைக்கணுப்புழுவின் தாக்குதல் தென்பட வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த 15 நாட்கள் இடைவெளியில் 5 முறை 1 சி.சி. என்ற அளவில் முட்டை ஒட்டுண்ணிகளைக் கட்டி விட வேண்டும்.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

No comments:

Post a Comment