Thursday 25 December 2014

ஏற்காட்டில் இரண்டாம் பருவ மலர்க்கண்காட்சி நாளை தொடக்கம்

ஏற்காடு இரண்டாம் பருவ மலர்க்கண்காட்சி மற்றும் கலை விழா வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் வரை நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் உதகை என அழைக்கப்படும் ஏற்காட்டில்  இரண்டாம் பருவ மலர்க்கண்காட்சி மற்றும் கலை விழா வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்த விழா வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு குதிரைகள் அணிவகுப்புடன் சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் நாதஸ்வரம், தவில் ஆகியவற்றுடன் சேலம் ஸ்ரீ அங்கம்மாள் கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், கிராமிய கலைநிகழ்ச்சி, ஜலகண்டாபுரம் தனபால் குழுவினரின் கோல்கால் ஆட்டம், தப்பாட்டம், வாண வேடிக்கை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் படகுத்துறையில் இருந்து விழா ஊர்வலம் துவங்க உள்ளது.
மேலும், சேலம் தாய் விழுதுகள் வழங்கும் திருநங்கைகளின் கலைநிகழ்ச்சி, அண்ணா பூங்காவில் 5000 மலர் தொட்டிகளில், 2,00,000 மலர்களை கொண்ட மலர்க்கண்காட்சி மற்றும் சிறப்பு மலர் அலங்காரங்கள் துவக்க விழா நிகழ்ச்சி, பல்வேறு அரசுத்துறைகளின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி துவக்கம் ஆகியவை நடைபெற உள்ளது.
நண்பகல் 1 மணிக்கு திறந்தவெளி கலையரங்கில் மொரப்பூர் பாரதி கலைக்குழுவினரின் தப்பாட்ட நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு திறந்தவெளி கலையரங்கில் கோவை சுவாமிநாதன் குழுவினரின் துடும்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அதைத்தொடர்ந்து சனிக்கிழமை கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சி, கோலப்போட்டி, கொழு கொழு குழந்தைகள் போட்டி, சமையல் போட்டி ஆகியவை நடைபெற உள்ளது. இத்துடன் கலை நிகழ்ச்சி, பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.
மலர்க்கண்காட்சி இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி, விளையாட்டு போட்டிகள், நாய் கண்காட்சி, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளது.
இந்த மூன்று நாள்களும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க படக் காட்சி மற்றும் திரைப்படம் ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்து வசதி, மலிவு விலை உணவு, 10 இடங்களில் சேலம் மாவட்ட மோட்டார் பைக் மெக்கானிக்குகள் சங்கம் சார்பில் இரு சக்கர வாகன இலவச பழுதுபார்க்கும் முகாம், சுற்றுலா பயணிகளுக்கான குதிரை சவாரி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம், சேர்வராயன் கோவில் மற்றும் தலைச்சோலையில் சிறப்பு பூஜை ஆகியவை நடத்தப்பட உள்ளது.

Source: ஏற்காட்டில்-இரண்டாம்-பருவ-ம/article2588249.ece

No comments:

Post a Comment