Tuesday 23 December 2014

ஆர்வம் இருந்தால் பட்டுப் புழுவில் லாபம் பார்க்கலாம்

பதிவு செய்த நாள்

24டிச
2014 
00:00
போதுமான அளவிற்கு காற்று இல்லாத இடம், அதிகளவில் பனிகொட்டும் பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பது இயலாதகாரியம் என்பதால் மலைஅடிவாரங்களில் வசிக்கும் விவசாயிகள் இந்த தொழிலில் ஆர்வம் காட்டுவதில்லை.
ஆனால் பழநி அருகே பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயி எஸ்.செல்லமுத்து 37. காற்று குறைவான, பனிபெய்து கொண்டே இருக்கும் இடத்தில் இரண்டு ஆண்டுகளாக பட்டு புழுக்களை வளர்த்து சாதனை விவசாயி என்பதை நிரூபித்துள்ளார்.
விவசாயி செல்லமுத்து கூறியதாவது:" மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பாலாறு- பொருந்தலாறு அணைப்பகுதியை ஒட்டியுள்ள பாலசமுத்திரத்தில் ஆண்டு முழுவதும் நெல், கரும்பு, மக்காச் சோளம் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகிறது. பட்டுப்புழு வளர்ப்பதற்கான சாத்தியகூறுகள் இல்லாததால் விவசாயிகள் அந்த தொழிலை மேற்கொள்ள முன்வரவில்லை.
தமிழ்நாடு பட்டு புழு வளர்ப்பு களப்பணியாளர்கள் என்னை தொடர்புகொண்டு அரசு மானியத்தொகை உதவியுடன் பட்டு புழு வளர்த்தால் நல்ல வருமானம் ஈட்டலாம் என ஆலோசனை அளித்தனர். அதன்படி ஓசூரிலுள்ள அரசு பட்டுபுழு வளர்ச்சி மையத்தில் 5 நாட்கள் பயிற்சி எடுத்தேன். அரசு வழங்கிய நடவு மானியம் ரூ.8 ஆயிரம், கூரை அமைக்க மானியம் ரூ.80 ஆயிரத்தை அடிப்படையாகக் கொண்டு 1.5 ஏக்கரில் மல்பேரி செடிகள் வளர்த்து அதன் அருகே கூடாரம் அமைத்து பட்டுபுழுக்களை வளர்த்து வருகிறேன். 
நரிக்கல்பட்டி, பொள்ளாச்சி, கோத்தனூர் பகுதிகளில் பட்டுபுழுக்கள் வளர்க்கின்றனர். அவர்களிடமிருந்து ஏழுநாட்களான 100 முட்டையை ரூ.2000 த்திற்கு வாங்கி வந்து மல்பேரி செடியில் விட்டுவைப்போம். "டேபிள்பேன்' மற்றும் "ஹீட்டர்' உதவியுடன் பட்டுபுழுவளர்ச்சிக்கு தேவையான 24 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் வகையில் கவனமாக பார்த்து வளர்த்து வருவதால் 100 முட்டைகளில் இருந்து 90 கிலோ பட்டு கூடுகள் கிடைத்து வருகிறது.
இவற்றை பெங்களூருவில் விற்பனை செய்கிறேன். கிலோ ரூ.350 முதல் ரூ.500 வரை பட்டு கூடுவின் தரத்திற்கு ஏற்றவாறு ஏலம் கேட்கின்றனர். மல்பேரி செடிகளை மாட்டு சாணம், ஆட்டு உரமிட்டு நிறைய தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். அதை விரும்பி தின்னும் புழுக்கள் 23 நாட்களில் கூடுகட்டி விடும். இத்தொழிலில் கவனத்துடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டால் ஆரம்ப முதலீட்டை இரண்டு ஆண்டுகளில் எடுத்துவிடலாம். நல்ல வருமானமும் கிடைக்கும்,' என்றார்.
இவருடன் பேச 98426 50151.
-சி.முருகன், பழநி.

Source: 

No comments:

Post a Comment