Saturday 27 December 2014

பாதிப்பு! : பனிப்பொழிவால் குண்டு மல்லி விளைச்சல்... : கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை

பதிவு செய்த நாள்

27டிச
2014 
02:21
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், குண்டு மல்லி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவேரிப்பட்டணம், சந்தாபுரம், மலையாண்டஅள்ளி, தேர்பட்டி, சந்தூர், வேலம்பட்டி, அவதானபட்டி, திம்மாபுரம், ராமாபுரம், தட்டக்கல், செலப்சனாம்பட்டி, பாளேகுளி சுற்றுவட்டார கிராமங்களில், 5,000 ஏக்கருக்கு மேல், குண்டு மல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் குண்டு மல்லி, காலை மற்றும் மாலை வேளைகளில் பறிக்கப்பட்டு, வேன் மூலம், பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து விமானம் மூலம் வெளி மாநிலங்கள் மட்டுமன்றி வெளி நாடுகளுக்கும், குண்டு மல்லி அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சீஸன் காலங்களில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, நாள்தோறும் ஐந்து டன் மல்லிகை பூ பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும். விளைச்சல் அதிகமாக இருக்கும்போது, விலை குறைவாக இருக்கும். பொதுவாக, குண்டு மல்லி சாகுபடிக்கு அதிக வெயிலும் இல்லாமல், அதிக குளிரும் இல்லாத சீதோஷ்ண நிலை இருக்க வேண்டும். அப்போதுதான், செடிகளில் அதிக அரும்புகள் விட்டு, விளைச்சல் அதிகரிக்கும். சீஸன் காலங்களில், ஒரு கிலோ மல்லிகை பூ, 30 ரூபாயில் இருந்து, 70 ரூபாய் வரை விற்பனையாகும். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குறிப்பாக தென்பெண்ணை ஆற்றுப் படுகை பகுதியான காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதியில், சில நாட்களாக இரவில் கடும் பனிப்பொழிவு உள்ளது. காலை, 8 மணி வரை பனிப்பொழிவு நீடிக்கிறது. பனிப்பொழிவு குண்டு மல்லி செடிகளில் நேரடியாக படிவதால், அரும்புகள் விடுவது பாதிக்கப்பட்டுள்ளது.
செடிகளில் விடும் ஒரு சில அரும்புகளும், பனிப்பொழிவால் கருவி விடுகிறது. இதனால், தற்போது குண்டு மல்லி விளைச்சல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விளைச்சல் குறைந்து காணப்பட்டாலும், கர்நாடகா மாநிலத்தில் குண்டு மல்லி விளைச்சல் அதிகம் உள்ளதால், இங்கு விலை ஏற்றம் அடையாததால், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர்.
காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார குண்டுமல்லி விவசாயிகள் கூறியது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, பனிப்பொழிவு ஓரளவுக்கு இருக்கும். இதனால், குண்டு மல்லி விளைச்சலுக்கு எவ்வித பாதகமும் இல்லாமல் இருந்தது. ஆனால், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு டிசம்பர், 10ம் தேதிக்கு மேல் இருந்து, கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால், குண்டு மல்லி செடிகளில் அரும்புகள் விடாமல் கருகி விடுகிறது. ஒரு ஏக்கரில், 50 கிலோ மல்லி பறித்த காலம் போய், தற்போது ஐந்து கிலோ பூக்கள் கூட பறிக்க முடியாத நிலை உள்ளது. விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோ குண்டு மல்லி, 100 ரூபாயில் இருந்து, 120 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதால், மல்லி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1147566

No comments:

Post a Comment