Friday 12 December 2014

அறுவடை தருணத்தில் தொடர் மழையால் கவலை! விளைந்த நெல் வீடு வந்து சேருமா?


பதிவு செய்த நாள்

12டிச
2014 
07:27
ஈரோடு : தொடர் மழையால், நெல்மணிகளில் முளைப்பு திறன் பாதிக்கும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காலிங்கராயன் பாசனத்தில், 17,770 ஏக்கர் பாசனம் பெறுகிறது. ஜூன், 15ம் தேதி முதல் ஏப்ரல் இறுதி வரை தண்ணீர் விட வேண்டும். இந்தாண்டு, ஜூலை இறுதியில் தான் நீர் திறக்கப்பட்டது. நெல், வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் நடவு செய்தனர். தலைமடை பகுதிகளில் அறுவடை நடக்கிறது. பிற பகுதிகளில் அறுவடை துவங்கி உள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் அறுவடை பாதிக்கும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று காலை, 8 மணி நிலவரப்படி, பவானிசாகர், 8.2 மி.மீட்டர், ஒரத்துப்பாளையம், 1, சத்தியமங்கலம், 5, புங்கம்பாடி, 15.6, ஈரோடு, 13, கொடிவேரி, 6, கோபி, 8, எலந்தகுட்டை மேடு, 10, கவுந்தப்பாடி, 6.8, பெருந்துறை, 28, பவ ானி, 17.6 மி.மீட்டர் பதிவானது.
பீளமேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவராஜ் கூறியதாவது: நெல் அறுவடை துவங்கி உள்ளது. இந்நிலையில், சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கதிர்கள் தலை சாய்ந்து நிற்கிறது. மழை நீடிக்கும் பட்சத்தில், நெல்மணிகள் சேற்றில் புதைந்து, முளைப்பு திறன் பெறும். சில இடங்களில் நெல்மணிகள் சேற்றில் புதைந்துள்ளது.
இதனால், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு, 6,000 ரூபாய் வரை பாதிப்பு ஏற்படுகிறது. பாதிப்புகள், தற்போது தான் துவங்கி உள்ளது. ஆட்கள் மூலமாகவும், இயந்திரம் மூலமும் நெல் அறுவடை பணி துவங்கி உள்ளது. மழை நீடித்தால், விவசாயிகளுக்கு இழப்பு அதிகரிக்கும். அறுவடை பணியை, விரைவில் வரும் நாட்களில் தீவிரப்படுத்துவர், என்றார்.
காலிங்கராயன் தலைமடை பகுதி விவசாயிகள் சங்க தலைவர் ரமேஷ் கூறியதாவது:மழை தொடர்ந்தால் பாதிப்பு வரும். 30 சதவீதம் அறுவடை முடிந்துள்ளது. 60 சதவீதம் பாக்கி உள்ளது. போதிய மெஷின்கள் இல்லை. எனவே அறுவடை தாமதமாகும். இந்நிலையில், மழை பெய்யும் பட்சத்தில் நெற்பயிர்கள் தலை சாய்த்து மண்ணில் புதைந்தால், விவசாயிகளுக்கு இழப்பு அதிகளவில் இருக்கும், என்றார்.
வேளாண் துறை இணை இயக்குனர் செல்வராஜ் கூறும் போது, அறுவடைக்கு சில தினங்கள் உள்ளன. பால்மணிகள் முற்றி வரும் பருவமாகும். பெய்து வரும் மழையால், நெற்பயிருக்கு அதிகம் பாதிப்பு இருக்காது. பெரும்பாலும் நெல்மணிகளை, விவசாயிகள் பாதுகாப்பாக எடுத்து விடுவர். தொடர்ச்சியாக, கனமழை பெய்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும், என்றார்.அறுவடை தருணத்தை நெற்பயிர்கள் அடைந்துள்ள தருணத்தில், தொடர் கன மழை பெய்து வருவதால், விளைந்த நெல்லை, வீடு கொண்டு வந்து சேர்க்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: 

No comments:

Post a Comment