Tuesday 6 January 2015

கைவிரிப்பு ! : விவசாயிகளுக்கு மானிய விதை வழங்காமல்... : நடப்பு நிதி ஆண்டில் கொள்முதல் இல்லை

பதிவு செய்த நாள்

06ஜன
2015 
19:55
காஞ்சிபுரம்: நடப்பு நிதி ஆண்டு முடிய உள்ள நிலையில், காய்கனி விதைகளை கொள்முதல் செய்வதற்கு, தோட்டக் கலைத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், வெளிச் சந்தையில் கூடுதல் விலை கொடுத்து, காய்கனி விதைகளை வாங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுஉள்ளனர்.விவசாயத் துறையின் முக்கிய பகுதியாக தோட்டக்கலை துறை விளங்கி வருகிறது. தோட்டக் கலைத் துறை மூலம், கத்திரி, வெண்டை, மிளகாய், தர்பூசணி, சப்போட்டா போன்ற பல்வேறு காய்கனிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்த அளவே இருப்பதால், மானிய விலையில், அவற்றின் விதைகளை, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை பட்டத்தில், விவசாயிகளுக்கு தேவையான காய்கனிகளின் விதைகளை மானிய விலையில், தோட்டக்கலைத் துறை வழங்கி வந்தது.
கூடுதல் விலைக்கு...
அதன்படி, கடந்த 2013-14ம் நிதி ஆண்டில், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான, காய்கனிகளின் விதைகள், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், நடப்பு நிதி ஆண்டில், ஆடி பட்டம் முடிந்து, தை பட்டம் துவங்கி விட்டது. இந்த நிலையில், மானிய விலை விதை விற்பனை குறித்து எந்தவித அறிவிப்பையும் தோட்டக் கலைத் துறை வெளியிடாததால், கடந்த ஐந்து மாதங்களாக, மானிய விதை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால், காய்கனி விதைகளை, வெளிச்சந்தையில், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு, கோடைக்காலத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தர்பூசணி விதைத்தால், மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில், அதை விவசாயிகள் அறுவடை செய்வர்.
ஆனால், நடப்பாண்டிற்கு மானிய விலையில் தர்பூசணி விதையை தோட்டக் கலைத் துறை இதுவரை விவசாயிகளுக்கு வழங்கவே இல்லை. வெளிச்சந்தையில், ஒரு கிலோ தர்பூசணி விதை 4,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை தற்போது விற்கப்படுகிறது. ஆனால், தோட்டக்கலை துறை மூலம் மானிய விலையில் கிடைத்தால், 2,000 முதல் 2,500 வரை விவசாயிகளுக்கு செலவு குறையும்.
தோட்டக்கலை துறையின், காய்கனிகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கடந்த நவம்பர் மாதமே தர்பூசணி விதை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், ஜனவரி மாதம் வரை விதை கிடைக்காமல் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் புகார்
இதுகுறித்து, தோட்டக்கலைத் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, 'விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகளை வழங்க, ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான உத்தேச விதை பட்டியல் கிடைக்கப் பெற்று, அதன்படி, விதைகளை வழங்கும் தனியாருக்கு அதற்கான ஆர்டர் கொடுக்கப்படும். ஆனால், இந்த நிதி ஆண்டை பொறுத்தவரையில், இதுவரை எந்த பட்டியலும் தயாரிக்கப்படவில்லை. அதோடு, விதை வேண்டும் என்று எந்த ஆர்டரும் கொடுக்கப்படவில்லை. இனிதான் அதற்கான வேலைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றனர்.
நடப்பு நிதி ஆண்டில், எந்தவித காய்கனிகளின் விதைகளையும் விவசாயிகளுக்கு வழங்க, தோட்டக்கலைத் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், வெளிச்சந்தையில் காய்கனி விதைகளை கூடுதல் விலை கொடுத்து விவசாயிகள் வாங்கி, பயிரிட துவங்கி விட்டனர். மொத்தத்தில், தோட்டக் கலைத் துறை தங்களை கைவிட்டு விட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
தோட்டக்கலைத் துறையின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''காய்கனி விதை கிடைக்காமல், விவசாயிகள் சிரமப்படுவது எங்களுக்கு தெரியும். இந்த பிரச்னை காஞ்சிபுரம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ளது. மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தான், மானியத்தில் காய்கனிகளின் விதை கிடைக்கும். அடுத்த மாதம் அனைத்து விதமான காய்கனிகளின் மானிய விலை விதைகள் கிடைக்கும் என, நம்புகிறோம்,'' என்றார்.

Source: 

No comments:

Post a Comment