Monday 19 January 2015

தீயாக உயருது தீவன விலை! திகைப்பில் பால் உற்பத்தியாளர்கள்

பதிவு செய்த நாள்

19ஜன
2015 
23:41
கோவை : மாட்டு தீவனங்களான கோதுமை தவிடு, பருத்திக்கொட்டை புண்ணாக்கு விலை மூட்டைக்கு, ௧௦௦ ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் திகைத்துப்போய் உள்ளனர்; பால் கொள்முதல் விலையை அதிகரிக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு, கடந்தாண்டு நவ., மாதம் பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தியது. தொடர்ந்து, தனியார் பால் நிறுவனங்களும் லிட்டருக்கு 7 ரூபாய் வரை விலையை உயர்த்தின. பல்வேறு காரணங்களால் உயர்த்தப்பட்ட பால் விலையால், உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.பசு மாடுகளுக்கு, தட்டு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தவிர, பால் உற்பத்தியைக்கூட்ட பருத்திக்கொட்டை புண்ணாக்கு, கோதுமை தவிடு, நெல் தவிடு, மக்காச்சோள மாவு, பட்டாணி துாள் ஆகியன தீவனங்களாக வழங்கப்படுகின்றன. புண்ணாக்கு, தவிடு வகைகள் பெரும்பாலும் காங்கயம், வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலிருந்து கோவைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில், 350 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த கோதுமை தவிடு மூட்டை (60 கிலோ), தற்போது, 100 ரூபாய் அதிகரித்து, 1,050 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், பருத்திக்கொட்டை புண்ணாக்கு, மக்காச்சோள மாவு, நெல் தவிடு உள்ளிட்ட தீவனங்களின் விலை மூட்டைக்கு, 30 முதல் 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தீவன விலை அடிக்கடி உயர்த்தப்படுவதால் அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், பால் உற்பத்தி செலவை கருத்தில்கொண்டு, கொள்முதல் விலையை அரசு நிர்ணயிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறுகையில், ''தீவன விலை உயர்வால் உற்பத்தியாளர்களுக்கு, மேலும் பளு அதிகரிக்கிறது. பால் உற்பத்தி செலவுக்கேற்ப, அரசு கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும். இதனால், கறவை மாடுகள் வளர்க்க ஆர்வம் அதிகரிப்பதுடன், பால் உற்பத்தியும் பெருகும்,'' என்றார்.

Source: 

No comments:

Post a Comment