Wednesday 21 January 2015

தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி - சாதிக்கும் கெங்குவார்பட்டி விவசாயி

பதிவு செய்த நாள்

21ஜன
2015 
00:00
தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வறட்சி நிலவியது. இதனால் பெரியகுளம் தாலுகாவில் ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி கிராமங்களில் அதிக அளவில் தென்னை மரங்கள் நீரின்றி காய்ந்தது. காய்ந்து போன மரங்களை விவசாயிகள் வெட்டி அகற்றினர். இந்நிலையில் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த விவசாயி காமராஜ் தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார்.
நான்கு ஆண்டுக்கு முன்பு ஒரு ஏக்கருக்கு 200 மரம் வீதம் 10 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்களுக்குள் ஊடுபயிராக கோகோ நடவு செய்தார். நடவு செய்த மூன்றாவது ஆண்டில் இருந்து பலன் கிடைக்க துவங்கியது. தொடர்ந்து 40 ஆண்டுகள் வரை பலனை அனுபவிக்கலாம். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு முழுப்பலனையும் அடையலாம்.
ஆண்டுதோறும் ஜூன் முதல் நவம்பர் வரையும் நல்ல பலன் கிடைக்கும். மற்ற மாதங்களில் குறைந்த அளவு பலன் கிடைக்கும். பருவமழை துவங்குவதற்கு முன்பே கோகோ செடிகளை கவாத்து செய்யவேண்டும்.
ஒரு மரத்திற்கு தலா 2 கிலோ காய்கள் கிடைக்கும், தற்போது ஒரு கிலோ காய் ரூ.200 விலை கிடைக்கிறது. ஒரு மரத்திற்கு ஆண்டுக்கு ரூ. 400 வருவாய் கிடைக்கிறது. காயை நொதித்தல் செய்து மூங்கில்கூடையில் போட்டு வாழை இலை கொண்டு மூடி வைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாற்றி வைக்க வேண்டும். ஐந்து நாட்கள் காய வைக்க வேண்டும். நான்கு நாட்களுக்குப் பிறகு விற்பனைக்கு தயாராகிவிடுகிறது.
செம்பட்டியில் உள்ள காட்பெரி நிறுவனம் சார்பில் கொள்முதல் செய்கின்றனர்.
கோகோ பயிர் சாகுபடிக்கு அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு முதலாம் ஆண்டு, 22 ஆயிரத்து 500 ரூபாய், இரண்டாம் ஆண்டு 9 ஆயிரம் மானியம் தரப்படுகிறது. கன்று உரம் உட்பட இடு பொருட்களாக வழங்குகின்றனர். சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி நடக்கிறது. கோகோ சாகுபடிக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கடன் கிடைக்கிறது.
விவசாயி காமராஜ் கூறியதாவது: கர்நாடகாவில் 1980 ல் கோகோ நடவு செய்யப்பட்டது. 5 ஆண்டுக்கு பிறகு விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் மரங்களைவெட்டி அழித்து விட்டனர். தற்போதுவெளிநாடுகளில் மரங்கள் முதிர்ந்து விட்டதால் உற்பத்தி குறைந்துவிட்டது. ஆனால் கோகோ தேவை அதிகரித்துள்ளது. தற்போதைய விலையை விட கூடுதலாக 300 ரூபாய் வரை விலை கிடைத்தால் சாகுபடி பரப்பளவு கூடுவதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் கவாத்து செய்யும் போது நிலத்திற்கு நல்ல உரம் கிடைக்கிறது. நிலப்போர்வையாக பயன்படுவதால், ஈரத்தன்மை பாதுகாக்கப்படுகிறது. நீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது. இலைகள் மக்கி உரமாக பயன்படுகிறது. தென்னையில் ஊடுபயிராக வாழை, மஞ்சள் சாகுபடி செய்து பார்த்த போது போதிய பலன் கிடைக்கவில்லை. தற்போது கோகோ சாகுபடி நல்ல பலனைத் தருகிறது, என்றார்.
இவருடன் பேச 82206 27712.
- முத்துக்காமாட்சி, தேவதானப்பட்டி.

Source: 

No comments:

Post a Comment