Friday 23 January 2015

காக்க...காக்க...நெல் பயிரைக் காக்க..

நவரைப் பருவத்தில் நடவு மேற்கொள்ளப்பட்ட நெல் பயிர்களை சுருட்டுப் புழுக்கள், குருத்துப்பூச்சிகள் அதிகம் தாக்கி சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, இதிலிருந்து நெல் பயிர்களைக் காக்கும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுகுறித்து காட்டுப்பாக்கம் வேளாண் நிலைய உதவிப் பேராசிரியர் முருகன் கூறியது:
நவரைப் பருவத்தில் நடவு மேற்கொள்ளப்பட்ட நெல் பயிர்கள் இப்போது தூர் கட்டும் பருவத்தில் உள்ளது. இந்தப் பருவத்தில் உள்ள பயிர்களில் இலை சுருட்டுப் புழுத் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது.

சுருட்டுப் புழு தாக்குதலின் அறிகுறிகள்: பச்சை அல்லது வெளிர் மஞ்சள் நிறப் புழுக்கள் நெல்லின் இலையை நீள வாட்டிலோ அல்லது பக்கவாட்டிலோ மடித்துப் பின் உள்ளே இருந்து இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. தாக்கப்பட்ட இலைகள் வெண்ணிறம் அடைந்து ஒளிச்சேர்க்கை குறைந்து வளர்ச்சி குன்றி விடுகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்: ஒரு ஏக்கருக்கு 5 விளக்குப் பொறி அமைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை விட, அதிக தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
இலைச் சுருட்டுப் புழுக்களின் முட்டைகளைத் தாக்கி அழிக்கின்ற டிரைக்கொகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 40,000 (2சிசி) என்ற அளவில் நடவு நட்ட 37, 44 அல்லது 51 நாள்களில் வெளியிட வேண்டும்.
பூச்சிகளின் தாக்குதல் சேத அளவை அடையும்போது 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம். ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகளான புரபனோபாஸ் 50 (இசி) 400 மி.லி. அல்லது கொராஜன் 60 மி.லி. என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

குருத்துப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்: நெல் தண்டுத்துளைப்பான் எனப்படும் இப் பூச்சியின் தாக்குதல் நாற்றாங்காலிலேயே தொடங்குகிறது. இளம் பயிர்களில் குருத்தை துளைத்து உண்பதால் நடுக்குருத்து வாடி கருகிவிடும். தாக்கப்பட்ட பயிரின் வளர்ச்சி குன்றி தூர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். கதிர்ப் பிடிக்கும் தருணத்தில் இதன் தாக்குதல் இருந்தால், கதிர் மணிகள் பால் பிடிக்காமல் சாவியாகி வெண்கதிர்களாக மாறிவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நடுவதற்கு முன் நாற்றுகளின் நுனியைக் கிள்ளி முட்டைக் குவியல்களை அழிக்கலாம். டிரைக்கொகிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 40,000 வீதம் (2சிசி) என்ற அளவில் நடவு நட்ட 30, 37 நாள்களில் வயல்களில் வெளியிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறி வைத்து தாய் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசல் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
பொருளாதார சேத நிலை அறிந்து புரபனோபாஸ் 50 (இசி) 400 மி.லி. அல்லது கொராஜன் 60 மி.லி. என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
எனவே விவசாயிகள் அவரவர் நெற்பயிர்களில் உள்ள இலைச்சுருட்டுப் புழு, குருத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த மேலே கொடுக்கப்பட்ட தொழில்நுட்ப முறைகளைக் கையாண்டு பூச்சிகளின் சேதத்தை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 044 - 2745 2371 என்ற தரைவழித் தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றார் முருகன்.

Source: காக்க...காக்க...நெல்-பயிரைக்-கா/article2630417.ece

No comments:

Post a Comment