Wednesday 21 January 2015

சின்ன சின்ன செய்திகள்

பதிவு செய்த நாள்

21ஜன
2015 
00:00
ஏலக்காய் - நாற்றங்கால் பராமரிப்பு :நாற்றங்காலில் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்ற வேண்டும். நாற்றங்கால் நோயைக் கட்டுப்படுத்த 0.2 சத காப்பர் ஆக்ஸி குளோரைடு 100 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் என்ற அளவில் கலந்து அல்லது 2 சத சூடோமோனாஸ் கரைசலை 100 லிட்டர் தண்ணீர் 2 கிலோ என்ற அளவில் கலந்து தூர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். இலைப்புள்ளி நோய் தென்பட்டால் 0.25 சத டைபோலடான் 100 லிட்டர் தண்ணீரில் 250 கிராம் என்ற அளவில் கலந்து அல்லது 1 சத போர்டோ கலவை அல்லது 2 சத சூடோமோனாஸ் கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

மிளகு பயிர் பாதுகாப்பு : சிற்றிலை மற்றும் பில்லோடி ஆகிய நச்சுயிரி நோய் தாக்கிய கொடிகளை அகற்றி அழித்து விட வேண்டும். மெதுவாடல் நோய் அறிகுறி தென்பட்டால் கொடிக்கு ஒருகிலோ வேப்பம்பிண்ணாக்கு இட வேண்டும்.
மிளகு அறுவடை: மிளகு கொத்தில் ஒன்று அல்லது இரண்டு மிளகு மணிகள் பச்சை நிறத்திலிருந்து ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்திற்கு மாறுவது தான் மிளகு முதிர்ச்சி அடைந்ததற்கு அறிகுறியாகும். மிளகு கொத்திலிருந்து மிளகு மணிகளை சுகாதாரமான முறையில் கை கொண்டு அல்லது மிளகு பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் பிரித்தெடுக்க வேண்டும். மூங்கில் பாய், கான்கிரீட் உலர் களம், பாலிதீன் தார்ப்பாய் போன்ற சுத்தமான மற்றும் சுகாதாரமான பரப்புகளின் மீது மிளகினை உலர்த்த வேண்டும். இதனால் மிளகின் தரத்தினை உயர்த்த முடியும்.

மிளகாய் பராமரிப்பு : கரிசல் மண் பிரதேசங்களில் 20-25 நாட்களுக்கு ஒருமுறையும், செம்மண் பிரதேசங்களில் 10-15 நாட்களுக்கு ஒருமுறையும் நீர் பாய்ச்ச வேண்டும். கருகல் மற்றும் பழ அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது 2 கிராம் மான்கோசெப் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
காய் துளைப்பானைக் கட்டுப்படுத்த 2 கிராம் பி.டி.யை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது ஹெச்.என்.பி.பி / எஸ்.என்.பி.பி கரைசலை எக்டருக்கு 500 மிலி தெளிக்க வேண்டும். ஒரு எக்டரில் தெளிக்க 500 லிட்டர் தண்ணீர் போதுமானது. காய் துளைப்பான்களின் ஸ்போடங்டெரா மற்றும் ஹெலிகோவெர்பா அந்துப்பூச்சி நடமாட்டத்தைக் கண்காணிக்க எக்டருக்கு 10 இனக்கவர்ச்சி பொறிகளை அமைக்க வேண்டும். சாறு உறிஞ்சுப் பூச்சிகளின் தாக்குதல் இருந்தால் வெர்டிசீலியம் லெக்கானி ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

வாழைக்கு GA கரைசல் : கண்ணாடி இலை பருவத்தில் (அ) குலை தள்ளும் தருணத்தில் GA தெளிப்பதால் குலையின் நீளத்தையும், குலைகளில் உருவாகும் சீப்புகளுக்குள் இடைவெளியும் அதிகரிக்கலாம். குலையில் எல்லா சீப்புகளும் வெளிவந்த பின்பு ஒரு முழம் விட்டு பூ ஒடிக்கலாம். கடைசி சீப்பு வெளிவந்த உடனோ அல்லது பூ ஒடித்த பின்போ குலைகளில் உள்ள பிஞ்சுகளின் மீது GA கரைசலை தெளிப்பதால் பிஞ்சுகள் நீண்டு வளர்கின்றன.
ஒரு கிராம் GA பவுடரை 30 மிலி ஸ்பிரிட்டில் கொட்டி கரைத்து, இக்கலவையை 200 லிட்டர் நீரில் கரைத்து அத்துடன் கிரீன் ஆம்பிள் டானிக் 500 மிலி + VOLTA 80 பசை 50 மிலி கலந்துதெளிக்கலாம். GA பவுடர் வடிவில் 1 கிராம் பேக்கில் கிடைக்கிறது. இது நீரில் கரையாது. ஸ்பிரிட்டில் தான் கரையும்.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

No comments:

Post a Comment