Sunday 4 January 2015

மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழை பற்றாக்குறை ! : சராசரி அளவு கூட பெய்யாததால் விவசாயிகள் கவலை

பதிவு செய்த நாள்

04ஜன
2015 
23:04
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழை சராசரி அளவைவிட குறைவாகவே பெய்து வருவதால், விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் வடிகால் பகுதியான கடலூர் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
மொத்த நிலப்பரப்பில் 5 லட்சத்து 38 ஆயிரத்து 460 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்யும் மழைநீர், பல்வேறு நதிகளாக பெருக்கெடுத்து கடலூர் மாவட்டத்தை செழிப்பாக்கி விட்டு இறுதியில் வங்கக் கடலில் சங்கமிக்கிறது. இவ்வாறு பெருக்கெடுத்து வரும் மழைநீர் காரணமாக வீராணம், பெருமாள், வெலிங்டன், வாலாஜா உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி, மாவட்டத்தில் நவரை, குறுவை, சம்பா ஆகிய முப்போக நெல் சாகுபடிக்கு கைகொடுத்து வந்தது.
குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழையே மாவட்டத்தின் ஓராண்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. கடந்த 10 ஆண்டு காலத்தில் எடுத்த கணக்கின்படி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை 1,335.50 மி.மீ., ஆகும். அதில் குளிர் (ஜனவரி, பிப்ரவரி) பருவத்தில் 24.36 மி.மீ., அளவும், கோடை (மார்ச் முதல் மே வரை) பருவத்தில் 143.39 மி.மீ., அளவும், தென்மேற்கு ( ஜூன் முதல் செப்டம்பர் வரை) பருவ காலத்தில் 325.63 மி.மீ. அளவும், வடகிழக்கு (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) பருவ காலத்தில் 842.12 மி.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், கடந்த 2012ம் ஆண்டு 53.40 சதவீதமான 713.2 மீ.மீ., கடந்த 2013ம் ஆண்டு 74.12 சதவீதமான 990 மி.மீ., அளவே மழை பெய்துள்ளது. கடந்தாண்டு 88.86 சதவீதமான 1,186.74 மி.மீ., மழை பெய்துள்ளது.
இது கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளை விட கூடுதலாக இருந்தாலும், ஆண்டின் சராசரி மழையில் 11.14 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. அதிலும், குறிப்பாக ஆண்டின் மொத்த மழையில் பெரும் பகுதி பெய்யும் வடகிழக்கு பருவ காலத்தில் மொத்தம் பெய்ய வேண்டிய 842.12 மி.மீ., க்கு 652.51 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. இது வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையில்77.43 சதவீதமாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக சராசரி அளவை விட குறைவாக பெய்து வருவது மாவட்ட விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை கலக்கமடையச் செய்துள்ளது.


மாதம் பருவம் சராசரி ஆண்டின் மழை அளவு மி.மீ.,
---------------------------------------------------
2012 2013 2014
--------------------------------------------------
ஜனவரி குளிர் 17.32 3.80 0.00 1.21
பிப்ரவரி  '' 7.04 0.00 14.10 11.00
--------------------------------------------------
மார்ச் கோடை 37.89 4.80 29.20 00.00
ஏப்ரல்  ''  29.19 2.88 2.35 00.00
மே  '' 76.31 24.25 24.00 173.23
--------------------------------------------------
ஜூன் தென் 31.73 2.34 49.90 49.35
ஜூலை மேற்கு 50.39 52.31 27.90 46.36
ஆகஸ்ட்  '' 112.16 55.96 259.70 164.27
செப்டம்பர் '' 131.36 98.28 123.50 89.25
--------------------------------------------------
அக்டோபர் வட- 277.72 361.20 134.64 300.66
நவம்பர் கிழக்கு 406.33 92.78 232.86 209.93
டிசம்பர்  '' 158.07 14.60 91.81 141.48
--------------------------------------------------
மொத்தம் 1335.50 713.20 990.00 1186.74
--------------------------------------------------

Source: 

No comments:

Post a Comment