Friday 2 January 2015

எப்போதும் ! : வனவிலங்குகளுக்கு உணவு பஞ்சம் தீர்வது... : காடுகளில் புல், பழமரம் வளர்க்க வேண்டும்

பதிவு செய்த நாள்

03ஜன
2015 
02:10
தியாகதுருகம்: மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பழவகை மரங்களை வளர்க்கவும், புல்வெளிகளை உருவாக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்ட மேற்கு எல்லையான கல்வராயன் மலையில் துவங்கி வனப்பகுதி பல லட்சம் ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இதில் பெரும் பகுதி சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் வியாபார நோக்கில் மரங்களை வளர்க்க காப்பு காடுகள் அழிக்கப்பட்டது.
பாதுகாப்பு இல்லை
காடுகளின் அடர்த்தி குறைந்ததால் உணவு, தண்ணீர், பாதுகாப்பின்றி பல விலங்குகள் இறந்தன. கரடி, ஓநாய், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் இடம் பெயர்ந்தன. குறைந்த பரப்பில் பாதுகாக்கப்படும் காப்பு காடுகளிலும் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் விலங்குகள் வயல்களுக்கு படையெடுப்பது தொடர் கதையாக உள்ளது. மான், காட்டு பன்றி, மயில், முயல், உடும்பு, குள்ளநரி உள்ளிட்ட விலங்குகள் மட்டுமே உயிர் தப்பி வாழ்கின்றன. அதேபோல் கூட்டமாக குரங்குகளும் வனப்பகுதியில் தஞ்சமடைந்து உணவு தேடி சாலையோரங்களில் அணிவகுத்து பரிதாபமாக நிற்பதை காணமுடிகிறது.
சின்னசேலம் அடுத்த நைனார்பாளையம் காப்பு காட்டில் 2,000 க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. போதிய பாதுகாப்பின்றி இவை வனப்பகுதியை விட்டு வெளியே வருவதால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள வனப்பகுதியில் வியபார நோக்கில் யூக்கலிப்டஸ் மரங்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. இதனால் காடுகளின் அடர்த்தி குறைந்து விலங்குகளின் பாதுகாப்பு கேள்விக் குறியானது. இம்மரங்களால் விலங்குகளுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. யூக்கலிப்டஸ் இலைகளை கூட மான்கள் உண்பதில்லை. இதனால் காடுகளை விட்டு வெளியேறி வயல்களில் பயிர்களை சேதப்படுத்துவது அதிகரித்து வருகிறது.
தொட்டிகள்
யூக்கலிப்டஸ் மரங்கள் அறுவடை செய்யப்பட்டு பேப்பர் உற்பத்திக்கு அனுப்பிய பின் மீண்டும் அங்கு அதே மரக்கன்றுகளை மட்டுமே வளர்க்கின்றனர்.
இங்கு வாழும் விலங்குகளின் உணவு தேவை குறித்து வனத்துறையினர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. காடுகளில் உள்ள நீர்நிலைகள் பல இடங்களில் பராமரிப்பு இன்றி புதர்மண்டி கிடக்கிறது. கோடை காலத்தில் வனவிலங்குகள் தேவைக்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகள் தூர்ந்து போயுள்ளது. வனவிலங்குகளின் இருப்பிடத்தை அழித்து வளர்க்கும் யூக்கலிப்டஸ் மரங்கள் மூலம் ஆண்டுதோறும் கணிசமான வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. இதில் ஒரு பகுதியை கூட வனவிலங்குகளின் உணவு, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் செலவிடவில்லை. பழ மரங்களை நட்டு வளர்ப் பதாலும், நீர் நிலைகள் அருகில் புல்வெளியை உருவாக்குவதாலும் விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியும். வனப்பகுதியில் போர்வெல் அமைத்து சோலார் மின்மோட்டார் மூலம் கோடைகாலத்தில் தண்ணீர் கிடைக்க வழிசெய்யலாம். சொட்டு நீர் தெளிப்பான் சாதனத்தை பல இடங்களில் பொருத்தி தண்ணீர் தெளித்து புல்வெளிகளை வளர்ப்பதால் உணவு தேடி காடுகளை விட்டு விலங்குகள் வெளியே வருவது தடுக்கப்படும்.
பழ மரங்கள்
ஆண்டுதோறும் சுழற்சி முறையில் சீசனுக்கு தகுந்தாற்போல் பலன் தரும் பல ரக பழமரங்களை வனப் பகுதியில் நட்டு வளர்ப்பதால் குரங்கு, மான், காட்டு பன்றி உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு கிடைக்க வழிசெய்யலாம். பழ மரங்களை ஒரே இடத்தில் வளர்த்தால் அவை களை தேடி வரும் விலங்குகள் பாதுகாப்பு கேள்விக் குறியாகி விடும். இதனால் பரவலாக வனப்பகுதி முழுவதும் பழவகை மரங்களை நட்டு வளர்க்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில் தகுந்த ஈரப்பதம் உள்ளதால், நாவல், நெல்லி, மா, கொய்யா, பப்பாளி பழவகை மரங்களை நட்டு விலங்குகள் பலனடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

Source: 

No comments:

Post a Comment