Tuesday 6 January 2015

நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: மத்திய அரசிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

நதி நீர் இணைப்புத் திட்டத்தை காலதாமதம் இல்லாமல் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
நதிகள் இணைப்புக்கான சிறப்புக் குழுவின் 2-வது கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உரையை மாநில பொதுப்பணித் துறையின் செயலாளர் என்.எஸ்.பழனியப்பன் வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தீபகற்ப நதிகள் மேம்பாட்டுக் கூறுகளை அமல்படுத்தும்படி 1993-ம் ஆண்டிலேயே அப்போதைய பிரதமரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். இதன் மூலம் மகாநதி, கோதாவரி நதிகளின் உபரி நீர், கிருஷ்ணா, பென்னாறு, காவிரி, வைகை ஆகிய ஆறுகளுக்கு திருப்பப்படும். மேலும், மேற்கில் ஓடும் பம்பா, அச்சன்கோவில் ஆறுகளின் உபரிநீர், கிழக்குப் பகுதிக்கு வந்து சேரும்.
இந்தத் திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரித்து, தேச நலன் கருதி அதை செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரினார்.
பம்பா, அச்சன்கோவில், வைப்பாறு ஆகிய நதிகள் இணைப்பு உள்ளிட்ட தீபகற்ப நதிகள் இணைப்பு திட்டம், மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை தேசியமயமாக்குவது ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமரிடம் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதியன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மனு கொடுத்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆறுகளை இணைக்கும் திட்டங்கள் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தாக வேண்டும். கங்கை நதி மறுபுனரமைப்பு திட்டம்போல், நதிகள் இணைப்புத் திட்டங்களையும் தேசிய முன்னோக்குத் திட்டங்களில் (என்.பி.பி.) சேர்க்க வேண்டும்.
இல்லாவிட்டால் நதிகள் இணைப்புத் திட்டம் தொடங்காமலேயே போய்விடும். இந்தத் திட்டத்தை ஏற்காத மாநிலங்களின் ஒருமித்த கருத்தைப் பெறுவதற்கு காத்திருப்பது, நதிகள் இணைப்புத் திட்டத்தை மேலும் காலதாமதமாக்கிக் கொண்டே செல்லும் என்பது தமிழக அரசின் கருத்தாகும்.
மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு ஆகியவற்றை இணைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை நீண்ட நாட்களுக்கு முன்பாகவே தேசிய நீர் மேம்பாட்டு முகமை மூலம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் காலதாமதம் இல்லாமல் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, நதிகளை இணைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும்.
நதிகள் இணைப்பு கூறுகள் குறித்த முடிவும், செயலாக்கமும் இறுதி செய்யப்படாத நிலையில், காவிரி (கட்டளை), வைகை, குண்டாறு இணைப்புக்காக, தற்போதுள்ள சட்டப்படி நில ஆர்ஜிதம் செய்வது உட்பட தேவையான நிதி உதவியை மத்திய அரசு எங்களுக்குத் தர வேண்டும். எப்போதெல்லாம் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு அந்த உபரிநீர் கிடைக்க இந்தத் திட்டம் ஏதுவாக இருக்கும்.
கேரளத்தின் சில கோரிக்கைகளை மதிப்பிட்ட பிறகு, பம்பா, அச்சன்கோவில், வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன் மதிப்பீட்டின்படி, தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் திருப்பிவிடப்படும். இது உபரி நீரில் 20 சதவீதமாகும்.
ஆனாலும் நதிகள் இணைப்புக்கு கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறது. நதிகள் இணைப்பு இரண்டு மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக அமையும். எனவே முன்னுரிமை அடிப்படையில் அந்தத் திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க சிறப்புக் குழுவை அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற முடியும்.
நிதி உதவி வேண்டும்: தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டம் நீண்டு கொண்டே செல்வதால், தமிழக அரசு மாநிலத்துக்குள் பெண்ணையாறு (சாத்தூர் அணை) பாலாறு இணைப்பு, பெண்ணையாறு (நெடுங்கல் அணைக்கட்டு) பாலாறு இணைப்பு, காவேரி (மேட்டூர் அணை) சரபங்கா இணைப்பு, அத்திக்கடவு அவிநாசி வெள்ளக் கால்வாய்த் திட்டம், தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்பு ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கி விட்டது.
இந்தத் திட்டங்களுக்கான நிதியுதவியை மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். கடந்த அரசு அதை சாதகமாகப் பரிசீலிக்கவில்லை. எனவே தமிழக அரசின் பெண்ணையாறு (சாத்தூர் அணை) பாலாறு இணைப்பு, பெண்ணையாறு (நெடுங்கல் அணைக்கட்டு) பாலாறு இணைப்பு, காவிரி குண்டாறு இணைப்பு, அத்திக்கடவு அவிநாசி வெள்ளக் கால்வாய்த் திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு பரிசீலித்து, நில ஆர்ஜிதம் உள்பட தேவையான நிதியுதவியை அளிக்க வேண்டும்.
தேசிய நலன் கருதி, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் திட்டங்கள் நிறைவேற்றப்படும் வகையில் திட்டமிட வேண்டும். இதனால் ஆறுகள் இணைவதற்கு காலதாமதம் எழுவதற்கு வாய்ப்பு ஏற்படாது என்றார் பழனியப்பன்.

Source: http://www.dinamani.com/tamilnadu/2015/01/07/நதிநீர்-இணைப்புத்-திட்டத்த/article2607071.ece

No comments:

Post a Comment