Monday 19 January 2015

கோடையில் இனி வாடத் தேவையில்லை: தீவனப் பயிர்களை உற்பத்தி செய்ய யோசனைகள்

First Published : 15 January 2015 12:28 AM IST
கோடைகாலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்களை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை வேளாண் நிலையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காட்டுப்பாக்கம் வேளாண் நிலைய உதவிப் பேராசிரியர் முருகன் கூறியது:
கால்நடைகள் விவசாயிகளின் சமூக அந்தஸ்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகிறது. தமிழ்நாட்டில் சோளம், தீவனச்சோளம், மக்காச்சோளம், கம்பு, கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கினியா புல், கொளுக்கட்டைப் புல், வேலி மசால், குதிரை மசால், முயல் மசால் போன்ற தீவனப்பயிர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக, விவசாயிகள் மழைக் காலங்களில் அளவுக்கு அதிகமாக பசுந்தீவனப் புற்களை உற்பத்தி செய்து கொள்கின்றனர். ஆனால், கோடை காலங்களில் நீர்ப் பற்றாக்குறையால் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனப் புற்களை உற்பத்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
ஆகையால், விவசாயிகள் கோடைகாலத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்களை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை அறிந்து கொள்வது முக்கியமாகும்.
அதற்கான வழிகள்: வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய தீவனப் பயிர்களை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக கொளுக்கட்டைப் புல், தீவனச்சோளம் (கோ-27, கோ.எப்.எஸ்.-29), கினியாப் புல், கம்பு நேப்பியர் ஒட்டுப் புல் (கோ -1),
தீனாநாத் புல், வேலி மசால், முயல் மசால், செளண்டல் போன்ற பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
தீவனப் பயிர்களை சால்கள் அமைத்து சாகுபடி செய்தால் தண்ணீர் சேமிக்கப்படுவதுடன் பயிர்களுக்கு அதிக நீரும் கிடைக்கிறது.
அதிகமான தீவனப் பயிர் பரப்பளவிற்கு உவர் நிலத்தில் குதிரைமசால், வேலி மசாலும், களர் உவர் நிலத்தில் வேலி மசாலும், தரிசு நிலத்தில் முயல்மசால் போன்ற பயிர்களைத் தேர்வு செய்வதன் மூலம் தீவன உற்பத்தியைப் பெருக்கலாம்.
கழிவு நீர் கிடைக்கக் கூடிய நிலத்திலும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் வளர்ப்பதன் மூலம் பசுந்தீவன தட்டுப்பாட்டைத் தவிர்க்கலாம்
பயறுவகை பயிர்கள், அதிக வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய கொள்ளு, நரிப்பயறு போன்ற பயிர்களை கோடைகாலத்தில் விதைத்து 50 நாள்கள் கழித்து அறுவடை செய்து கால்நடைகளுக்கு சத்துமிகு தீவனப் பயிர்களாகக் கொடுக்கலாம்.
கோடைகாலத்தில் தீவனப் பயிர்கள் சாகுபடி செய்யும் நிலங்களில் மக்கியத் தொழு உரம் (10 டன்கள்), மண்புழு உரத்தை ( 2 டன்கள்) பயிர் இடைவெளியில் இட்டு நீர்ப் பாய்ச்சுவதால் மண்ணில் நீர்ப் பிடிப்பு திறன் அதிகமாகி பயிர்களுக்கு அதிக நாள் ஈரப்பதம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கோடைகாலங்களில் தீவனப் பயிர்களுக்கு மதியம், மாலை நேரங்களில் நீர்ப் பாய்ச்சுவதை விட காலை நேரங்களில் (அதாவது காலை 9 மணிக்குள்) நீர்ப் பாய்ச்சுவதால் பயிர்களுக்கு அதிக நீர் கிடைக்க வாய்ப்புள்ளது.
கோடைகாலத்தில் நீர்ப் பற்றாக்குறை உள்ள தீவனப்பயிர் சாகுபடி செய்யும் நிலங்களில் சால்கள், பாத்திகளில் நீர்ப் பாய்ச்சுவதைத் தவிர்த்து மழைத்தூவி பாசனம் மூலம் அதாவது, ஒரு ஏக்கருக்கு 5 முதல் 6 தெளிப்பு நீர் (மழைத் தூவி) வைத்து நீர்ப் பாய்ச்சுவதால் குறைந்த நீரில் அதிக பரப்பளவு நீர் பாய்ச்சலாம்.
இந்த மழைத் தூவி பாசனம் கம்பு நேப்பியர் ஓட்டுப்புல், தீவனச்சோளம், தீவன மக்காச்சோளம், கினியாப்புல் ஆகியவற்றிற்கு மிகவும் ஏற்றது.
குதிரை மசால், வேலி மசால், முயல் மசால், நரிப்பயறு, கொள்ளு, தட்டைப்பயறு போன்ற தீவனப்பயிர்களுக்கு நடமாடும் நீர்த் தெளிப்பான் மூலம் நீர்ப் பாய்ச்சலாம். அதாவது, ஒரு நடமாடும் நீர்த் தெளிப்பான் மூலம் ஒரு நாளைக்கு 1 முதல் 2 ஏக்கர் வரை நீர்ப் பாய்ச்சலாம். இவ்வகை கருவி மூலம் நீர் தெளிப்பதால் 60 முதல் 70 சதவீதம் வரை நீரைச் சேமிக்கலாம்.
அதேபோன்று, அனைத்து வகையான தீவனப் பயிர்களுக்கும் சொட்டு நீர்ப் பாசனம் அமைத்து நீர்ப் பாய்ச்சினால் 70 முதல் 80 சதம் வரை நீர் சேமிக்கப்படுவதுடன் 20 சதம் கூடுதல் மகசூல் எடுக்கலாம்.
மேலும் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீர்ப் பாசனம் மேற்கொண்டால் குறுகிய காலத்தில் அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். குறிப்பாக, கம்பு நேப்பியர் ஒட்டுப் புல் 70 நாள் இடைவெளியில் அறுவடை செய்வதைவிட 50 நாள்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்.
கோடை காலத்தில் தீவனப் பயிர்களின் இலையின் பரப்பளவில் அதிகமாக நீர் ஆவியாகும். இதனால் பாத்திகளுக்கு அடிக்கடி நீர்ப் பாய்ச்ச வேண்டும். நீர் ஆவியாதலைக் கட்டுப்படுத்த 40 முதல் 45 நாள்களில் அதாவது, அடிக்கடி அறுவடை செய்ய வேண்டும்.
இப்படி அடிக்கடி அறுவடை செய்வதால் பயிர்கள் அதிகம் வளரவிடாமல் குறைந்த நீரிலே குறைந்த வளர்ச்சி இருக்கும்போதே அறுவடை செய்து விடலாம்.
மேலும் தீவனப்பயிர்களின் இடைவெளியில் பயிர்க் கழிவு, காய்ந்த கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் இலைகள் மூலம் நிலப்பரப்பில் மூடாக்கு அமைத்து மண்ணில் இருந்து நீர் விரயமாவதைக் கட்டுப்படுத்தி மண்ணின் நீர்ப் பிடிப்புத் திறனை அதிகரித்து தீவனப் பயிர் மகசூலை அதிகப்படுத்தலாம்.
குட்டையாக வளரக் கூடிய தீவனப் பயிர்களுக்கு அதாவது முயல் மசால், கொளுக்கட்டைப் புல், குதிரை மசால், வேலிமசால் போன்ற பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசன முறையைப் பின்பற்றினால் 40 முதல் 50 சதம் வரை நீர்
சேமிக்கப்படுவதுடன் 10 முதல் 15 சதம் கூடுதல் மகசூல் எடுக்கலாம். சால்கள் அமைத்து தீவனப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒரு கால் விட்டு ஒரு கால் நீர்ப் பாசனம் செய்வதால் 50 சதவீதம் வரை நீர் சேமிக்கலாம்.
நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் இடங்களில் தீவன மர வகைகளை அதாவது சவுண்டல், அகத்தி, வாகை போன்ற மரங்களை மழைக் காலங்களில் வயலைச் சுற்றி வரப்பு ஓரங்களில் நடவு செய்வதால் கோடைகாலத்தில் இந்த வகையிலான மரங்கள் ஓரளவு தீவன உற்பத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்.
கோடைகாலங்களில் குறிப்பாக, கொளுக்கட்டைப்புல், முயல் மசால் புற்களை நுண் நீர்த் தெளிப்புப் பாசனம் செய்தால் 50 முதல் 70 சதவீதம் வரை நீர் சேமிக்கலாம். மேலும் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் மகசூல் ஈட்டலாம்.
சால்கள் அமைத்து நீர்ப் பாசனம் செய்யும் விவசாயிகள் நீர் செல்லும் கால்வாயில் பசும் சாணத்தை கரைத்து விடுவதால் தீவனப் பயிர்கள் குறைந்த நாள்களிலே உயரமாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராகிவிடும். மேலும் மண் வளம் பாதுகாக்கப்படும்.
பஞ்சகவ்யா (20 லிட்டர்), அமிர்த கரைசல் போன்ற இயற்கையான முறையில் தயாரிக்கக் கூடிய திரவங்களை தீவனப்பயிர் சாகுபடி செய்யும் நிலங்களில் விடுவதால் மண்ணின் நீர்ப் பிடிப்பு அதிகமாகி மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் மண் வளமும் மேம்படுத்தப்படும்.
மேலும் விவசாயிகள் இதுதொடர்பான விவரங்களை காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் 98844 02613 என்ற கைப்பேசி எண்ணிலோ, 044 - 2745 2371 என்ற தரைவழித் தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றார் முருகன்.

Source: கோடையில்-இனி-வாடத்-தேவையில்/article2619902.ece

No comments:

Post a Comment