Friday 2 January 2015

http://www.dinamani.com/tamilnadu/2015/01/02/அரசு-அறிவித்த-விலையை-வழங்க-ம/article2599639.ece

அரசு அறிவித்த விலையை வழங்க முடியாமல் தனியார் சர்க்கரை ஆலைகள் தடுமாறிக் கொண்டிருக்க, நிலுவைத் தொகையைப் பெற முடியாமலும், கரும்பை வெட்ட முடியாமலும் விவசாயிகள் கலங்கி நிற்கின்றனர்.
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 நிர்ணயம் செய்தால்தான் கட்டுப்படியாகும் என்று விவசாயிகள் போராடிவரும் நிலையில், கடந்த 2013-2014-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு, டன் ஒன்றுக்கு போக்குவரத்துச் செலவு உள்பட ரூ.2,650 கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
பொதுத் துறை, கூட்டுறவு ஆலைகள் இந்த விலையை வழங்கி விட்டன. தனியார் ஆலைகள் டன்னுக்கு ரூ.150 முதல் ரூ.250 வரை விவசாயிகளுக்கு நிலுவை வைத்துள்ளன.
தமிழகத்தில் இயங்கும் 27 தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் சுமார் 2 கோடி டன் அளவுக்கு கரும்பு கொள்முதல் செய்கின்றன. ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் சுமார் ரூ.500 கோடி என விவசாயிகள் கூறுகின்றனர்.
தனியார் ஆலைகளின் நிலை: தமிழக அரசு அறிவித்த கரும்பு விலையை, 2012-2013-ஆம் ஆண்டு வரை முழுமையாகக் கொடுத்தோம். இப்போது நிலைமை மோசமாகி விட்டது. கடந்த 5 ஆண்டுகளாக உலக அளவில், சர்க்கரை உற்பத்தியும் அதிகம், இருப்பும் அதிகம் என்ற நிலை காரணமாக சர்க்கரை விலை குறைந்துகொண்டே வருகிறது. மூட்டை ரூ.3,600 என இருந்த சர்க்கரை விலை, தற்போது ரூ.2,500 ஆகக் குறைந்து விட்டது.
உற்பத்தியாகும் மொலாசஸ், மின்சாரத்தின் விலையும் குறைவாக இருப்பதால், அறிவித்த விலையைக் கொடுக்க முடியாது என்பதை அரசிடம் சொல்லி விட்டோம். அந்த விலையைக் கொடுக்க வேண்டுமென்றால், அரசு எங்களுக்கு ஏதாவது ஒருவகையில் மானியம் வழங்க வேண்டும் எனக் கூறியிருக்கிறோம் என்றனர் தனியார் ஆலை நிர்வாகிகள்.
தனியார் ஆலைகளின் எதிர்பார்ப்பு: தனியார் சர்க்கரை ஆலைகளில் உள்ள மின் உற்பத்திக் கூடங்கள் ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே இயங்குகின்றன. இங்கு நிலக்கரி மூலமாகவும் மின் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தில் தற்போது மின் தட்டுப்பாடு நிலவுவதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். இதன்மூலம் சர்க்கரை ஆலைகள் நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க அரசு உதவ முடியும்.
அரசு தலையிடுமா? 2014-15-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு அரசு அறிவிக்கும் விலையை வழங்குவோம் என ஆலை நிர்வாகங்கள் உறுதியளிப்பதோடு, கடந்த அரைவைப் பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கினால், கரும்பு வெட்டிவிடத் தயார் என்கின்றனர் விவசாயிகள்.
ஆலைகள் இயங்காவிட்டால் நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, பணியாற்றும் பல ஆயிரம் தொழிலாளர்களும்தான் பாதிக்கப்படுவர். இதுபோல் காலம் கடந்த பின்னும் கரும்பை வெட்டாவிட்டால், விவசாயிகளுக்கும் இழப்புதான். இதனால், இப் பிரச்னைக்குத் தீர்வு காண அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகள், ஆலை நிர்வாகங்களின் எதிர்பார்ப்பு.

Source:அரசு-அறிவித்த-விலையை-வழங்க-ம/article2599639.ece

No comments:

Post a Comment