Monday 2 February 2015

பலா உற்பத்தி குறைவால், விலை உயரும் என... : தானே புயலுக்குப் பின் முழு விளைச்சல் இல்லை

பதிவு செய்த நாள்

02பிப்
2015 
01:13
பண்ருட்டி: பண்ருட்டி பகுதியில் பலா மரங்களில் பிஞ்சுகள் வைக்க துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முக்கனிகளில் ஒன்றான பலா பயிரிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பிஞ்சு வைக்க துவங்கி ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அறுவடையாகி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகிறது.

இந்த செம்மண் பூமியில் உற்பத்தியாகும் பலாப்பழத்திற்கு இந்திய அளவில் தனி மவுசு உண்டு. ஏனெனில் கேரளா மற்றும் மலைப் பகுதியில் விளையும் பலாப்பழத்தை விட பண்ருட்டியில் விளையும் பலாவின் சுளைகள் தங்க கலரிலும், இனிப்பான சுவை கொண்டதாக இருக்கும்.

இதில் மானாவாரி நிலத்தில் விளைந்த பலாப்பழம் என்றால் அதன் சுவை இன்னும் அதிகம். இதனால் பண்ருட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது தேன்சுவை கொண்ட பலாப்பழத்தின் ஞாபகம் தான்.

பண்ருட்டியில் இருந்து சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, மகாராஷ்டிரா, டில்லி ஆகிய பகுதிக்கு ஏப்ரல் மாதம் முதல் ஏற்றுமதி துவங்கும்.

துவக்கத்தில் அறுவடை செய்யும் பலாவை விட ஜூன் மாதங்களுக்கு பிறகு வரும் பலாப்பழம் தான் அதிக சுவையும், தரமான சுளைகள் கொண்டதாக இருக்கும்.

தானே புயலின்போது 30 சதவீத பலா மரங்கள் வேரோடு சாய்ந்து வீணானது. புயலில் மரங்களின் வேர்கள் பாதித்து மீண்டும் காய்க்கும் தன்மை குறைந்துவிடும் என்பதால் பழைய பலா மரங்களை அகற்றி பாலூர் ரக ஒட்டுரக பலா கன்றுகள் வைத்து பராமரிக்க தோட்டக்கலைத்துறை விஞ்ஞானிகள், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இதனை நம்பி பலா மரங்களை அகற்றிய 30 சதவீதம் விவசாயிகள் புதியதாக வைத்துள்ள மரக்கன்றுகள் காய்ப்பதற்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

புயலில் முந்திரி, பலா மரங்கள் பாதித்தால் லட்சாதிபதியாக இருந்த விவசாயிகள் பலர் அன்ன காவடியாக மாறினர். முந்திரி விவசாயமும் எதிர்ப்பார்த்த அளவிற்கு உற்பத்தியில்லை. இதனால் விவசாயிகள் பலர் பலா மரத்தை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். புயலில் பாதித்து வெட்டி அகற்றாமல் உள்ள மரங்களில் தற்போது சிறு, சிறு, பிஞ்சுகள் அதிகளவில் காய்த்துள்ளது. அதிகளவில் பிஞ்சுகள் வைத்த மரத்தில் அதிக காய்களால் வளர்ச்சி பாதிக்கும் என்பதால் 100 பிஞ்சு உள்ள மரங்களில் 50 பிஞ்சுகளை வெட்டி அகற்றி 50 பிஞ்சுகள் மட்டும் பழம் பெரிதாக காய்க்க தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மொத்தத்தில் தானே புயலுக்கு பின் உற்பத்தி முழு அளவில் இல்லாததால் ஒரு பழம் 250 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு மேல் விலை போகும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Source: 

No comments:

Post a Comment