Wednesday 18 March 2015

விவசாய நிலங்களில் ரசாயன பூச்சிகொல்லிகளை தவிர்க்கும் புதிய திட்டம்: 150 கிராமங்களில் அமல்

ரசாயன பூச்சிகொல்லிகளைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த "ஒருங்கிணைந்த பூச்சிநோய் மேலாண்மை மாதிரி கிராமத் திட்டம்' என்ற புதிய திட்டம் தமிழகத்தில் 150 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வேளாண் தொழில்நுட்ப அலுவலர்களுக்கான பயிற்சி, சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இந்தப் பயிற்சியை வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம், குறைந்த செலவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சி, பயிர் நோய் மேலாண்மை முறை விவசாயிகளிடையே பரவலாக்கப்படும். இந்தத் திட்டம் 16 மாவட்டங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 56 வட்டாரங்களைச் சேர்ந்த 150 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான செலவு ரூ.1.65 கோடியாகும். மாநில திட்டக்குழுவின் பங்களிப்பு ரூ.1.5 கோடியாகவும், விவசாயிகளின் பங்களிப்பு ரூ.15 லட்சமாகும்.
திட்டத்தின் பயன்கள்: இந்தப் புதிய திட்டத்தின் மூலம் ரசாயன பூச்சிகொல்லிகளைத் தவிர்த்து, விவசாயிகளே உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யலாம். சுற்றுச்சூழல் பொறியியல், சுற்றுச்சூழல் அமைப்புப் பகுப்பாய்வு தொழில்நுட்பத்தின் மூலம் விஷமில்லாத உணவு உற்பத்தி ஊக்குவிக்கப்படும். சூழ்நிலையோடு ஒருங்கிணைந்த வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அளித்து சாகுபடி செலவை குறைப்பது, வேளாண் கழிவுகளை மறுசுழற்சி மூலம் ரசாயன உரமில்லாத உணவு உற்பத்தி செய்வது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு பூச்சி நோய் மேம்பாட்டுத் திறனிலும் தன்னிறைவு அடையச் செய்வது ஆகியன இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
புதிய திட்டத்துக்கான பயிற்சியில் மாநில திட்டக் குழு துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர், வேளாண்மைத் துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் மு.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Source: http://www.dinamani.com/tamilnadu/2015/03/19/விவசாய-நிலங்களில்-ரசாயன-பூச/article2720530.ece

No comments:

Post a Comment