Wednesday 4 March 2015

மானாவாரியிலும் புரட்சி காணும் கேழ்வரகு சாகுபடி!

    சித்தாமூர் ஒன்றியம் ஈசூரில் கேழ்வரகு விளைவிக்கப்பட்டுள்ள வயல்.
குறைந்த தண்ணீர், நிறைந்த மகசூல், அதிக லாபம், மானாவாரியிலும் புரட்சி காணும் சத்துமிகு சிறுதானியமாக கேழ்வரகு சாகுபடி விளங்குவதாக காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழையை ஒட்டி விதைப்பு செய்யலாம்.சராசரியாக 400 முதல் 500 மி.மீ. மழையளவு உள்ள இடங்களில் பயிர் செய்வது மிகவும் ஏற்றதாகும்.
ரகங்கள்: இறவை மார்கழி பட்டம் (ரகங்கள்- கோ -12, கோ -14, கோ -15), இறவை சித்திரைப் பட்டம் (ரகங்கள்- கோ -12, கோ -14, கோ -15), மானாவாரி - ஆடிப் பட்டம், புரட்டாசிப் பட்டம் (ரகங்கள் - கோ -11, கோ -12, கோ- 14, பையூர் -1, 2, ஆடு 365).
நிலம் தயாரித்தல்: கோடை மழையைப் பயன்படுத்தி பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும்.
பின்னர் ஒவ்வொரு மழைக்குப் பின்பும் கலப்பைக் கொண்டு நிலத்தை உழுதுவிட வேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன் கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின்போது மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர் காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும். நீர் வரத்தைப் பொறுத்து 10 அல்லது 20 சதுர மீட்டரில் பாத்தியை அமைக்க வேண்டும்.
விதை அளவு: ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ என்ற அளவு.
பூசாண விதை நேர்த்தி: விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் கலவையை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் அல்லது டிரைகோடெர்மா விரிடியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்றளவில் நன்கு கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின் விதைக்க வேண்டும்.
நுண்ணுயிர் உரங்கள் விதை நேர்த்தி: அசோஸ்பைரில்லம், அசோபாஸ் நுண்ணுயிரை விதையுடன் கலந்து இடுவதால் 25 சதவீதம் தழைச் சத்தை சேமிக்கலாம்.
ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதையுடன் 600 கிராம் (3 பாக்கெட்) அசோஸ்பைரில்லம் அல்லது அசோபாஸ் நுண்ணுயிர் கலவையை குளிர்ந்த அல்லது அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும்.
இவ்வாறு கலந்த விதைகளை 24 மணி நேரத்துக்குள் விதைத்துவிட வேண்டும்.
நாற்றங்கால் தயார் செய்தல்: ஒரு ஹெக்டேர் வயலில் நடவு செய்யத் தேவைப்படும் நாற்றுகள் வளர்க்க 12.5 சென்ட் (500 மீ.) நாற்றங்கால் பரப்பு தேவை. 37.5 கிலோ சூப்பர் பாஸ்பேட்டுடன் 500 கிலோ தொழு உரம் கலந்து, நாற்றங்கால் பாத்திகளில் சீராக பரப்பி விடவும்.
3 மீட்டருக்கு 1.5 மீட்டர் அளவுள்ள 6 பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் நீர் பாய்ச்ச 30 செ.மீ. இடைவெளி விடவும்.
இடைவெளியில் உள்ள மண்ணை 15 செ.மீ. ஆழத்துக்குத் தோண்டி வாய்க்கால் ஆக்கவும். தோண்டிய மண்ணை பாத்திகள் மேல் போட்டு சமன்படுத்தி விடவும். விரலால் படுக்கையின் மீது ஒரு கோடிட வேண்டும்.
அதன் மீது விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளைத் தூவ வேண்டும். கையினால் மண்ணைத் தூவி விதைகளை மூட வேண்டும்.
500 கிலோ தொழு உரத்தை பாத்திகளின் மேல் தூவிவிட்டு விதைகளை மூடிவிட்டு மேற்பரப்பை இளக்கமாக்கவும்.
மேட்டுப் பாத்திகள் ஈரமடையும் வரை, வாய்க்காலில் தண்ணீர் விட்டு பின் நிறுத்தி விடவும். மண்ணின் வகையைப் பொருத்து, நீர்ப் பாசன இடைவெளி மாறுபடும்.
நாற்று நடுதல்: ஒரு குத்துக்கு 2 நாற்றுகளாக நடுதல் வேண்டும். நாற்றுகளை 3 செ.மீ. ஆழத்தில் நட வேண்டும். 18 முதல் 20 நாள்களுடைய நாற்றுகளை நட வேண்டும். 30 செ.மீ.க்கு 10 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும்.
வேர்களை நனைக்க அசோஸ்பைரில்லம் சேற்றுக் குழம்புத் தயாரிக்க, அசோஸ்பைரில்லம் 5 பாக்கெட்டுகள் (1 ஹெக்டேருக்கு 1000 கிராம்), பாஸ்போ பாக்டீரியா 5 பாக்கெட்டுகள், அசோபாஸ் 10 பாக்கெட்டுகள் இவற்றை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து சேற்றுக் குழம்பு தயார் செய்தல் வேண்டும்.
இந்தச் சேற்றுக் குழம்பில் நாற்றுகளை நடுவதற்கு முன் 15 முதல் 30 நிமிடங்கள் நனைக்க வேண்டும்.
களைக் கட்டுப்பாடு, பின்செய் நேர்த்தி: கேழ்வரகுப் பயிர்களில், நட்ட 3-ஆம் நாள் பூட்டாகுளோர் 1 லிட்டர் என்ற களைக்கொல்லியை கைத்தெளிப்பானால் தெளிக்கவும்.
நிலத்தில் தெளிக்கும் போது போதியளவு ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நட்ட 20 முதல் 25 நாள்களில் ஒரு இடை உழவு, அல்லது கைக்கிளை எடுக்க வேண்டும்.
தேவைப்பட்டால் 40-ஆம் நாள் ஒரு கைக்களை எடுத்தல் அவசியம்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: ஒரு ஹெக்டேர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பியப் பிறகு நிலத்தை உழ வேண்டும்.
ஒரு ஹெக்டேருக்கு 10 பாக்கெட் (2 கிலோ) அசோஸ்பைரில்லம், 20 பாக்கெட் (4 கிலோ) அசோபாûஸ 25 கிலோ மணல், 25 கிலோ தொழு உரம் கலந்து தூவ வேண்டும்.
மண் பரிசோதனைக்கு ஏற்ப உரமிடுதல் வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டாலும் பின்வரும் அளவில் உரமிடலாம்.
ரசாயன உரங்களான தழை, மணி, சாம்பல் சத்து ஹெக்டேருக்கு 60:30:30 கிலோ என்றளவில் பரிந்துரை செய்யப்படுகிறது.
இதில் பாதியளவு தழைச்சத்தை மேலுரமாக இடவும். நுண்ணூட்டச் சத்துக் கலவையை 12.5 கிலோ என்ற அளவில் மணலுடன் கலந்து நிலத்தின் மேல் சீராகத் தூவ வேண்டும்.
தூவப்பட்ட உரத்தை நிலத்துடன் கலக்கக் கூடாது.
நீர் நிர்வாகம்: நாற்று நடும்போது ஒரு நீர்ப் பாசனமும் பின்பு 4-ஆம் நாள் ஒரு பாசனமும், பிறகு வாரம் ஒருமுறை நீர்ப் பாசனமும் கொடுக்க வேண்டும்.
கேழ்வரகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்: இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான், இலைச் சுருள்களில் புழுக்கள் தங்கி நடு இலைகளை உண்ணுவதால் துவாரங்கள் ஏற்படும்.
அடி இலைகள் பச்சையாக இருந்தாலும், நடுக்குருத்து மட்டும் பழுப்பு நிறமாக மாறி பிறகு காய்ந்து விடும். துளையிடப்பட்ட துவாரங்களில் பூச்சிகளின் கழிவுகள் அடைத்துக் கொண்டிருக்கும் கதிர் வெளிவரும் பருவத்தில் வெண்கதிர் அறிகுறித் தோன்றும். கதிர் மணிகள் நிரம்பாமல் வெள்ளை நிறத்தில் தெளிவாகத் தெரியும்.
கட்டுப்படுத்தும் முறைகள்: பூச்சித் தாக்கத்தின் தொடக்கத்திலேயே காய்ந்த குருத்துக்களை பிடுங்கி அழித்துவிட வேண்டும்.
குறுகிய கால தானிய வகையல்லாத பயிர்களுடன் பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும். சரியான அளவு தழைச் சத்து உரங்களை முறையாகப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
விளக்குப்பொறி, இனக் கவர்ச்சிப் பொறியை வைக்க வேண்டும். உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகளான டிரைகோகிராமா மைனூடம் (முட்டை ஒட்டுண்ணிகள்) போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
வேர் அசுவினி: அசுவினி செடியின் அடிப் பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகின்றன. தாக்கப்பட்ட செடிகள் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறி குன்றிவிடும். ஆங்காங்கே செடிகள் திட்டுத் திட்டாக வாடி காய்ந்துவிடும்.
செடிகளில் தேன் துளி, தத்துப் பூச்சி கழிவுப் பொருள்களும், எறும்புகளும் காணப்படும். புல்களிலும் இந்த அறிகுறி காணப்படும்.
குஞ்சுகளும், முதிர்ப் பூச்சிகளும் செடியின் அடிப்பாகத்தைத் தாக்கி செடிகளின் வேரில் உள்ள சாற்றை உறிஞ்சுதால் செடிகள் வலுவிழந்து வாடிவிடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்: பாசன நீரில் குரூட் ஆயில் கலந்து விட வேண்டும். இலை சுருட்டுப் புழு, இளம் புழுக்கள் இலைகளை ஒட்டும் தன்மையுடன் நீளவாக்கில் சுருட்டி குழாய் போன்று அமைத்துக் கொள்ளும்.
இலையின் மடிப்புக்குள் இருந்து கொண்டு புழுக்கள் பச்சைப் பகுதியை சுரண்டித் தின்னும். சுரண்டப்பட்ட இலைகள் நரம்பு போல் ஆகி, பின்பு வெண்மையாகி உதிர்ந்துவிடும்.
பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு முடிவில் மகசூல் குறையும்.
கட்டுப்படுத்தும் முறைகள்: தானிய வகையல்லாத பயிர்களுடன் பயிர் சுழற்சி முறையைக் கடைபிடித்தல். 5 சதவீதம் வேப்பங்கொட்டைக் கரைசல் என்ற அளவில் தழைகளில் தெளிக்க வேண்டும்.
நடவு செய்த 15-ஆம் நாளில் இருந்து டிரைகோகிராமா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை 1 ஹெக்டேருக்கு 1 லட்சம் என்ற அளவில் 7 முதல் 10 நாள்கள் இடைவெளி விட்டு 5 முதல் 6 முறை வயலில் வெளியிட வேண்டும்.
பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் சார்ந்த உயிரியல் பூச்சிக்கொல்லிகளை 1 கிலோ அல்லது 1 ஹெக்டேருக்கு 1 லிட்டர் என்ற அளவில் 7 முதல் 10 நாள்கள் இடைவெளியில் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். விளக்குப் பொறி, இனக் கவர்ச்சிப் பொறி வைக்க வேண்டும்.
கேழ்வரகு பயிரைத் தாக்கும் நோய்கள் - பிளாட்ஸ்: நோயின் தீவிர தாக்கத்தினால் பயிர் காய்ந்தது அல்லது எரிந்தது போல் தோற்றமளிக்கும். பூட்டை வெளிவந்த பின்பு இந்த நோய் ஏற்பட்டால் பயிர் குட்டையாக வளரும்.
பூட்டையின் கழுத்துப் பகுதியில் கருப்பு நிறமுடைய புள்ளிகள் தோன்றி உதிர்ந்து விடும். கழுத்துப் பகுதியில் பிளவு ஏற்பட்டு பூட்டை ஒடிந்துவிடும். கணு கருகல் - கணுப் பகுதியில் கருப்பாகி ஒடிந்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்: டிரைக்லசோல் 500 கிராம் அல்லது கார்பட்டாசிம் ஹெக்டேருக்கு 250 கிராம் என்ற அளவில் தெளிக்கலாம்.
அறுவடை: நன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை செய்து, களத்தில் காயவைத்து, அடித்து பின் விதைகளைப் பிரித்தல் வேண்டும்.
மகசூல்: மானாவாரியில் 1 ஏக்கருக்கு 1,887 கிலோ வீதமும், இறவையில் 1 ஏக்கருக்கு 2,300 கிலோ வீதமும் மகசூல் பெறலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 044 - 27452371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 
Source: மானாவாரியிலும்-புரட்சி-காண/article2686719.ece

No comments:

Post a Comment