Tuesday, 24 March 2015

சின்ன சின்ன செய்திகள்

பதிவு செய்த நாள்

25மார்
2015 
00:00
சப்போட்டாவை பழுக்க வைத்தல்: சப்போட்டா பழங்கள் பூத்ததிலிருந்து 4-5 மாதங்களில் அறுவடைக்கு வரும் சப்போட்டாவின் காய்கள் முதிர்ச்சி அடைந்ததை அறிந்து கொள்ள தோலில் எந்த மாற்றங்களும் ஏற்படுவதில்லை. முதிர்ச்சி அடைந்த காய்கள் ஓரிரு மாற்றங்களைக் கொண்டு முதிர்ச்சி அடைந்த நிலை எனக் கண்டறிந்து பறிக்கப்படுவது பழக்கத்தில் உள்ளது.
சப்போட்டா பறித்தவுடன் பழமாக உண்ணும் நிலையில் இருப்பதில்லை. காலை நேரத்தில் சப்போட்டா காய்களில் அதிகமாகப் பால் இருப்பதால் (Latex) பிற்பகலில் பறித்து பழுக்க வைப்பது சிறந்தது. பறித்தவுடன் காய்களின் காம்பிலிருந்து பால் வடியும். காய்களை அதிகப்பாலுடன் பழுக்க வைத்தால் சரிவர பழுக்காமல் சேதமேற்படும். ஆகவே பறித்த காய்களை சாக்குபடுதாவின் மேல் பரப்பி இளம் வெயிலில் அரைமணி நேரம் வைத்தால் காய்களில் உள்ள பால் குறைந்து விடும். சிறிதளவு காயவைத்த காய்களை வைக்கோல் பரப்பிய மூங்கில் கூடைகளில் அடுக்கி கூடையின் மேல் பகுதியை மூங்கில்தட்டி அல்லது சாக்குப்பை பயன்படுத்தி இருக்கமாக மூடிவிடவேண்டும். கூடையிலுள்ள காய்கள் 3-4 தினங்களில் பழுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடிய பழமாக இருக்கும் சப்போட்டா பழுத்தபின் ஓரிரு நாட்களே உண்பதற்கான நிலையில் இருக்கும். பிறகு சுவை குன்றி அழுகி விடும்.
பழுத்த பழங்களை குளிர்சாதனை அறைகளில் 0 டிகிரி சென்டி கிரேடு முதல் 1.7 டிகிரி உள்ள சீதோஷ்ண நிலையில் 2 முதல் 4 வாரம் வரை நல்ல முறையில் வைத்திருந்து விற்பனை செய்ய முடியும்.

புதிய கோழி ரகங்கள்: ஐதராபாத்தில் உள்ள கோழி திட்ட இயக்குனரகம் "கிராமப்பிரியா' (முட்டை ரகம்), "வனராஜா' (முட்டை மற்றும் இறைச்சி ரகம்) ஆகிய கோழி ரகங்களை உருவாக்கி உள்ளது. இவை பார்ப்பதற்கு நாட்டுக்கோழிகளைப் போல இருக்கும். அதிக எண்ணிக்கையில் முட்டையை இடக் கூடியவை. முதலில் இந்த குஞ்சுகள் தடுப்பூசி மற்றும் உரிய தீவனங்களுடன் அடைக்காலங்களில் 6 வார காலம் தொடர் செயற்கை வெப்பத்தில் பராமரிக்கப்படுகிறது. பின்பு தான் விவசாயிகளுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக எடையையும், அதிக முட்டையிடும் திறனையும் கோழிகள் பெறுகின்றன. அதாவது 1.5 ஆண்டில் "கிராமப்பிரியா' ரகக்கோழி 200 முதல் 230 முட்டைகளும், "வனராஜா' ரகக்கோழி 100 முதல் 110 முட்டைகளும் கொடுக்கின்றன. கோழிகளின் எடையும் 2.2 கிலோ வரை இருக்கிறது.
இந்த இரண்டு கோழி இனங்களும் கோழி விதைத் திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளன. இவை இரண்டும் பறக்கடையில் வளர்க்கவே வழங்கப்படுகின்றன. கோயம்புத்தூர் மண்டலத்துக்குட்பட்ட ஈரோடு, சேலம், நீலகிரி, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கால்நடைப்பயிற்சி மையத்தில் இதற்கான முன்பதிவைச் செய்து கொள்ளலாம்.
மேலும் பத்து கால்நடை மருத்துவ அறிவியல், பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களிலும் இந்தக் கோழிக்குஞ்சுகளுக்கான முன்பதிவைச் செய்து பெற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு : இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர்-0422 - 266 9965.
வெண்டை ஹைபிரிடு OH.102 - வெள்ளை விழாத அதிக மகசூல் கொடுக்கக்கூடிய கோடைக்கு ஏற்ற வெண்டை ஹைபிரிடு பற்றிய விபரங்களுக்கு தொடர்பு முகவரி: Synqenta India Ltd. சரக அலுவலர்கள் - தேனி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம்- 95007 08707; சேலம், தர்மபுரி, நாமக்கல் - 94422 14885; திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர் - 85086 37849.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

No comments:

Post a Comment