Tuesday 28 April 2015

ஜூன் 21-இல் கோவையில் சர்வதேச காற்றாலை மின் சக்தி கருத்தரங்கு



இந்திய காற்றாலை மின் சக்தி சங்கத்தின் 4-ஆவது பன்னாட்டு காற்றாலை மின் சக்தி கண்காட்சி, கருத்தரங்கு கோவையில் ஜுன் மாதம் நடைபெறுகிறது.
 இதுகுறித்து, இந்திய காற்றாலை மின் சக்தி சங்கத் தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் கோவையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
 இந்திய காற்றாலை மின் சக்தி சங்கம் சுமார் 1,300 முதலீட்டாளர்கள், மின் உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. தமிழகத்தில் காற்றாலைகள் மூலமாக சுமார் 7,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
 இந்தியாவின் மின் சக்தி தேவைக்கு உதவும் வகையில், காற்றாலை மின் உற்பத்தியில் உள்ள இடர்பாடுகளைக் களைந்து, உற்பத்தியை அதிகரிக்கவும், இந்தத் துறையில் மேலும் முதலீடுகளை ஈர்க்கவும் எங்களது சங்கத்தின் சார்பில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
 அதன்படி, இந்த ஆண்டு 4-ஆவது சர்வதேசக் காற்று மின் சக்தி கண்காட்சி, கருத்தரங்கு ஜுன் 21 முதல் 23-ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
 இதில், காற்றாலை மின் சக்தி உற்பத்தியாளர்கள், டர்பைன் தயாரிப்பாளர்கள், கியர் பாக்ஸ், டவர்கள், டர்பைன் பிளேடுகள் தயாரிப்பாளர்கள், காற்று மின் சக்தி கட்டுப்பாடு அமைப்பு, கண்காணிப்பு, போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள், ஆலோசகர்கள், காற்று விசை குறித்து தகவல் வழங்கும் நிறுவனங்கள், காற்றாலை பராமரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
 உலகிலேயே அதிகளவில் காற்று மின் சக்தி உற்பத்தி செய்யும் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டால் இந்தத் துறையில் இந்தியா மேலும் வளர்ச்சி அடையும்.
 தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் காற்றாலைகளின் பங்கு 14 சதவீதமாக உள்ளது. காற்றாலை மூலமாக ஒரு யூனிட் மின் உற்பத்தி செய்ய ரூ. 3.12 மட்டுமே செலவாகிறது. இதர முறைகளில் மின் உற்பத்தி செய்வதைக் காட்டிலும் இது மிகவும் குறைவு என்பதால் மத்திய, மாநில அரசுகள் தேவையற்ற கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, காற்றாலை மின்சாரத் தயாரிப்பாளர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றார்.
 இப்பேட்டியின்போது கண்காட்சி, கருத்தரங்கின் தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தார்.

Source : Dinamani

No comments:

Post a Comment