Monday 25 May 2015

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி: 500 கிலோ திராட்சை பழங்களால் உருவாக்கப்பட்ட குட்டியுடன் கூடிய காட்டெருமை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது


குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 500 கிலோ திராட்சை பழங்களால் உருவாக்கப்பட்டு இருந்த குட்டியுடன் கூடிய காட்டெருமை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

பழக்கண்காட்சி

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று காலை 10.30 மணிக்கு 57-வது பழக்கண்காட்சி தொடங்கியது. பழக்கண்காட்சியை நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்து பார்வையிட் டார். இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பழக்கண்காட்சியை முன்னிட்டு குன்னூர் சிம்ஸ் பூங்கா நுழைவு வாயிலில் 12 அடி உயரத்தில் பலாப் பழம், பம்பளிமாஸ், எலுமிச்சை, அன்னாசி, ஆரஞ்சு, மாம்பழம் ஆகிய பழங்களால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பு வளையம் அமைக்கப்பட்டு இருந்தது. பூங்கா நுழைவு வாயில் முகப்பு வாசலில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் 1900 எடை கொண்ட முலாம்பழம், பலாப்பழம், மாதுளை, சப்போட்டா, கீனோ மற்றும் கிவி பழங்களால் ரங்கோலி கோலம் அமைக்கப்பட்டு இருந்தது.

இதேபோல் 500 கிலோ திராட்சை பழங்களை கொண்டு 7 அடி உயரம் கொண்ட குட்டியுடன் கூடிய காட்டெருமை கண்ணை கவரும் விதமாக அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், கருங்குரங்கு, வரையாடு, புள்ளிமான், கடமான் ஆகிய வனவிலங்குகளின் உருவங்கள் பல்வேறு வகையான பழங்களால் உருவாக்கப்பட்டு இருந்தது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சிங்கம், யானை

கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் சப்போட்டா, அன்னாசி, ஆரஞ்சு, திராட்சை, பப்பாளி, செர்ரி, எலுமிச்சை, தர்பூசணி ஆகிய பழங்களை கொண்டு பல்அடுக்கு சாகுபடி முறை மற்றும் தென்னையில் ஊடு பயிராக மிளகு மற்றும் கோக்கோ சாகுபடி மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

திருச்சி மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி பழங்களின் தோல்களை கொண்டு சிங்க வடிவமும். தேனி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் திராட்சை பழத்தை கொண்டு யானை உருவமும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்தனர்.

தூய்மை பாரத திட்டம்

திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் தூய்மை பாரத திட்டத்தை பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் தோல்களை கொண்டு அலங்காரம் அமைக்கப்பட்டு இருந்தது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் மலைப்பகுதியில் பயிரிட்டுள்ள பிளம்ஸ், பீச், கொய்யா, பேரி, மங்குஸ்தான், துரியன் பழம், ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மாம்பழம், பலாப்பழம், நெல்லிக்காய் ஆகியவை அரங்குகளில் வைக்கப்பட்டு இருந்தன.

நிறைவு விழா

பழக்கண்காட்சியை முன்னிட்டு படுகர் மற்றும் கோத்தர் இன மக்களின் பாரம்பரிய நடனமும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பழக்கண்காட்சி நிறைவு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் பழக்கண்காட்சி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சங்கர் பரிசு வழங்குகிறார். மேலும் நிறைவு விழாவில் வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் வீரர் களின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மணி தலைமையில் உதவி இயக்குனர் ராம்சுந்தர் மற்றும் அலுவலர்கள் செய்து இருந்தனர். பழக்கண்காட்சியை முன்னிட்டு குன்னூர் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment