Monday 18 May 2015

ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன


ஆனைமலை,
ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 6 ஆயிரத்து 400 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
விவசாயிகள் கோரிக்கைஆழியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் விவசாயம், குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6 ஆயிரத்து 400 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும், 3 ஆயிரத்து 400 ஏக்கரில் தென்னை, வாழை உள்பட பல்வேறு பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆண்டு தோறும் மே மாதம் 15–ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் சிக்கி நாசமாகின. எனவே இந்த ஆண்டு சரியான நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தண்ணீர் திறப்புஇதைத்தொடர்ந்து ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். இதன்படி நேற்று மாலை 3 மணிக்கு ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சப்–கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே தலைமை தாங்கி, தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து பாய்ந்து ஓடிய தண்ணீர் மீது மலர் தூவப்பட்டது. நிகழ்ச்சிக்கு கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன், செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆழியாறு சிறுபுனல் மின் நிலையம் வழியாக திறக்கப்பட்டுள்ள தண்ணீரினால் 1.25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15–ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும். இது குறித்து பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன் கூறியதாவது:–
பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் ஆழியாறு அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் முருகேசன், மாரிமுத்து, சின்னராஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Source: Dinathanthi

No comments:

Post a Comment