Wednesday 6 May 2015

மகசூலை அதிகரிக்க நீர் ஆய்வு அவசியம்வேளாண் துறை அதிகாரி யோசனை


பட்டுக்கோட்டை, : "விவசாயத்தில் மகசூலை அதிகரிக்க, பாசன நீர் ஆய்வு செய்வது அவசியம்,' என, தஞ்சாவூர் மாவட்ட சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாசன நீரில் உப்புத்தன்மை, களர்தன்மை என இருவகை உள்ளது. பாசனநீரில் கரையும் தன்மையுள்ள கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் தாதுக்களின் குளோரைடு, சல்பேட் அயனிகள் அதிகளவில் இருந்தால் உப்பு தன்மையும். அதே போல், சோடியம் கார்பனேட், சோடியம்-பை- கார்பனேட், மெக்னீசியம் கார்பனேட் உப்புகள் அதிகமிருந்தால் களர் தன்மையும் ஏற்படுகிறது. இதை கண்டறிய ஆய்வு செய்வது அவசியம்.
நீர் மாதிரி எடுப்பதற்கு, சுத்தமான கண்ணாடி பாட்டில் அல்லது பாலித்தீன் பாட்டிலை உபயோகிக்க வேண்டும். மோட்டார் இணைக்கப்பட்ட கிணற்றில், 10 முதல் 30 நிமிடம் தண்ணீரை ஓடவிட்டு, அந்த தண்ணீரிலேயே பாட்டிலை கழுவி, மாதிரிக்காக அரை லிட்டர் தண்ணீர் எடுக்க வேண்டும். கண்மாய், குளங்களின் நீர் மாதிரி எடுக்கும் போது, பாட்டிலின் வாயை கைவிரலால் மூடி மூழ்கடித்து மாதிரி எடுக்க வேண்டும். கயிறு கட்டி இறைக்கும் கிணற்றில், 2 அல்லது, 3 வாளி தண்ணீர் இறைத்து பெரிய வாளி சேகரித்து மாதிரி எடுக்க வேண்டும். காலை, 9 மணிக்குள் நீர் மாதிரி சேகரிக்க வேண்டும்.நீர் மாதிரி எடுத்த பாட்டில்களை கண்டிப்பாக வெயிலில் வைக்கக்கூடாது. தஞ்சை மாவட்டத்தில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண், நீர் ஆராய்ச்சி நிலையம் (தஞ்சாவூர்) காட்டுத்தோட்டம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்யப்படுகிறது. நீர் மாதிரி அனுப்பும் போது விவசாயியின் பெயர், கிராமம் மற்றும் முகவரி விவரம், கிணறு இருக்கும் நிலத்தின் சர்வே எண், திறந்த வெளி கிணறா, ஆழ்குழாய் கிணறா, குளமா, கண்மாயா, தண்ணீர் பாயும் நிலத்து மண்ணின் ஆய்வு விவரம் ஆகிய விவரங்கள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.


Source: Dinamalar

No comments:

Post a Comment