Monday 4 May 2015

பண்ருட்டி பகுதியில் பலா விளைச்சல் அமோகம்


பண்ருட்டி வட்டாரத்தில் பலாப்பழ விளைச்சல் அதிகரித்துள்ளதால்  விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பண்ருட்டி, கெடிலம் நதிக்கு வடபகுதியில் வளம் நிறைந்த செம்மண் பூமியில் பலா மரங்கள் செழித்து வளர்கின்றன. கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியில் சுமார் 635 ஹெக்டேர் பரப்பளவில் பலா மரங்கள் உள்ளன. அனேக கிராமங்களில் வரப்பு பயிராகவும், மேலிருப்பு, பெரியகாட்டுப்பாளையம், மேல்மாம்பட்டு, சாத்திப்பட்டு ஆகிய கிராமங்களில் முழு அளவிலும் பயிர் செய்கின்றனர்.
 தானே புயலின்போது இப்பகுதியில் இருந்த பெரும்பாலான மரங்கள் சேதம் அடைந்தன. புயலில் சேதம் அடைந்து எஞ்சி நின்ற மரங்கள் தற்போது காய்க்கத் தொடங்கி உள்ளன. பலா மரங்களில் அதிக அளவில் காய் காய்த்துள்ளது.
 தற்போது அறுவடை சீசன் என்பதால் சந்தைக்கு பலா பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது. விளைச்சல் அதிகரிப்பு காரணமாக இதன் விலை சரிவடைந்துள்ளது. சந்தையில் பெரிய பழம் ஒன்றின் விலை ரூ.100 முதல் ரூ.150 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் பலாப்பழத்தை வாங்க வராததால் கிராமப் பகுதிகளில் பலாப் பழத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக விளைச்சல் இன்றி பாதிக்கப்பட்டு வந்த விவசாயிகள் தற்போது விலை வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.


Source: Dinamani

No comments:

Post a Comment