Monday 18 May 2015

மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஏற்காடு சுற்றுலா பயணிகள் உற்சாக படகு சவாரி

ஏற்காடு சுற்றுலா தலம் மலர் கண்காட்சிக்கு தயாராகி வருகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.

மலர் கண்காட்சி

சேலம் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோடை வாசஸ்தலமான ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் முதல் வாரத்தில் கோடை விழாவையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படும். ஏற்காட்டின் மையப்பகுதியாக அமைந்துள்ள அண்ணா பூங்காவில் தான் இந்த மலர் கண்காட்சி 3 நாட்கள் நடத்தப்படும்.

இந்த ஆண்டு, அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் 3 நாட்கள் மலர் கண்காட்சியை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்து வருகின்றனர். குறிப்பாக அண்ணா பூங்காவில் ரோஜா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலர் ரகங்களின் ஏராளமான மலர்தொட்டிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளன. இது மட்டுமின்றி, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத்துறை, வனத்துறை சார்பில் பல்வேறு படைப்புகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. மேலும், ஏராளமான சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சியும், பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

படகு சவாரி

இதையொட்டி மலர்க்கண்காட்சியில் வைக்கப்பட உள்ள மலர் தொட்டிகள் பதியம் போட்டு வளர்க்கும் பணி ஐந்திணை பூங்காவில் ஏற்கனவே நடைபெற்றது. தற்போது அந்த பூங்காவில் செடிகள் பூக்க தொடங்கி உள்ளன. இவ்வாறு பதியம் போட்ட செடிகளுடன் கூடிய மலர் தொட்டிகள் இந்த மாத இறுதிக்குள் அண்ணா பூங்காவில் வைக்கப்பட உள்ளதாக தோட்டக் கலைத்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே கோடை விடுமுறையையொட்டி கடந்த ஒரு வாரமாக ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் குளு,குளு சூழல் நிலவியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இதனால் ரோஜா தோட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சுற்றுலா தலத்தில் தங்கள் செல்போன்களில் ‘செல்பி‘ புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இதேபோல் படகு சவாரியும் களை கட்டியது. ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.  

Source: Dinathanthi

No comments:

Post a Comment