Monday 25 May 2015

பயிரை பாதுகாக்க விவசாயிக்கு எஸ்.எம்.எஸ் இ-பயிர் மருத்துவ முகாமில் அறிவிப்பு

புதுக்கோட்டை: பயிர்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கான தீர்வுகளை, தமிழில் குறுஞ்செய்தி மூலம், விவசாயிகளின் செல்போனுக்கு அனுப்பப்படும். இந்த குறுஞ்செய்தியை விவசாய இடுபொருள் கடைகளில் காண்பித்து, தேவையான பயிர் பாதுகாப்பு மருந்துகளை பெற்று, விவசாயிகள் பயன்படுத்த, இ-பயிர் மருத்துவ வசதி, புதுக்கோட்டையில் துவங்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கே.பி., இணைந்து நடத்திய, இ-பயிர் மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு, விவசாயி பரிமளா தலைமை வகித்தார். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், இ-பயிர் மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசியதாவது, இந்தியாவில் முதல் முறையாக பரிச்சார்த்த முறையில் இ-பயிர் மருத்துவ முகாம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், பயிர் மருத்துவ முகாமிற்கு விவசாயிகள் கொண்டுவரும், பாதிக்கப்பட்ட பயிர் மாதிரிகளை ஆய்வு செய்து, அதன் விபரங்களை டேப்லெட்டில் பதிவு செய்யப்படும்.
பயிர்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கான தீர்வுகளை, தமிழில் குறுஞ்செய்தி மூலம், விவசாயிகளின் செல்போனுக்கு அனுப்பப்படும். விவசாயிகள், தங்கள் செல்போனில் உள்ள, குறுஞ்செய்தியை விவசாய இடுபொருள் கடைகளில் காண்பித்து, தேவையான பயிர் பாதுகாப்பு மருந்துகளை பெற்று பயன்படுத்தலாம்.
இத்திட்டம் ஆராய்ச்சி அடிப்படையில், 20 கிராமங்களில், 8 மாதங்கள் செயல் படுத்தப்படும். இத்திட்டத்தினால், விவசாயிகளுக்கு ஏற்படும் பயன்கள் மற்றும் கருத்துக்கள் அடிப்படையில், இத்திட்டத்தை தொடர்ச்சியாக செயல்படுத்துவது மற்றும் பிற கிராமங்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.
தாக்குதலுக்கு உட்பட்ட பயிர் மாதிரிகள் ஆராயப்பட்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் பரிந்துரை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, சரியான மேலாண்மை முறைகளை மேற்கொண்டு பயனடைய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். முகாமில், 35 விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர் மாதிரிகளை எடுத்துவந்து பங்கேற்றார்கள். மல்லிகை, மக்காச்சோளம், கத்தரி, எள், உளுந்து ஆகிய பயிர்கள் முகாமில் ஆய்வுசெய்து பரிந்துரைகள் வழங்கப்பட்டது. பயிர் டாக்டர் செந்தில்குமார், முருகன் ஆகியோர், விவசாயிகளுக்கு உரிய பரிந்துரைகளை வழங்கினார்கள்.

Source : Dhinamalar

No comments:

Post a Comment