Wednesday 27 May 2015

தென்னையில் பென்சில் கூர்முனை குறைபாடும் நிவர்த்தியும்

இந்தியாவில் கேரள மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் 1970 ஆம் ஆண்டுகளில் மிக அரிதாகக் காணப்பட்ட பென்சில் கூர்முனை குறைபாடு சமீபகாலங்களில் குறிப்பாக அதிக அளவில் தென்படுகின்றது. ஆரம்ப நிலையிலேயே இக்குறைப்பாட்டை கட்டுப்படுத்தாவிட்டால் தென்னையின் மகசூல் அதிகமாக பாதிக்கப்படும்.
அறிகுறிகள் : தென்னை மரத்தின் அடிப்பகுதி அகலமாகவும், மேற்பகுதி குறுகி பென்சில் முனை போன்று காணப்படும். இக்குறைபாடு, பயிர் வினையில் ஏற்படும் மாற்றத்தால் தோன்றுகின்றது. மரத்தில் வேரிலிருந்து நீர் மற்றும் சத்துக்கள் மரத்தின் உச்சிக்கு கடத்துவது பாதிக்கப்பட்டு அறிகுறிகள் தோன்றும். அடி மட்டைகளில் உள்ள இலைகள் மஞ்சளடைந்து, வலுவிழந்து கீழே விழுந்து விடும். நாளடைவில் மட்டைகள் சிறுத்தும், எண்ணிக்கை குறைந்தும் காணப்படும். காய்க்கும் திறன் குறைந்து தேங்காய்களில் பருப்பு சிறுத்து அல்லது முற்றிலும் இல்லாமல் தோன்றும். இக்குறைபாடு அதிகமாகும்போது காய்ப்புத்திறனை முற்றிலும் குறைத்து விடும்.
காரணங்கள் : நுண்ணூட்டச்சத்துக்களான இரும்பு, துத்தநாகம், போரான் சத்துக்களின் பற்றாக்குறைகள் காரணமாக இக்குறைபாடு ஏற்படுகின்றது. காய்ந்த மட்டைகள், பாளைகளை அகற்றும் பொழுது பச்சை மட்டைகளையும் சேர்த்து வெட்டுவதால் மரத்தின் ஒளி சேர்க்கைத் திறன் பாதிக்கப்படுவதாலும் இக்குறைபாடு தோன்றும். அதிக வயதான மரங்களில் ஊட்டச்சத்தை கிரகிக்கும் திறன் குறைவதாலும் பாதிப்பு உண்டாகும். மண் கண்டம் குறைந்த நிலங்களில் ஊட்டச்சத்துக்களின் கிடக்கை குறைவாக இருந்தாலும், சதுப்பு நிலங்கள், வடிகால் திறன் குறைவான நிலங்களில் தென்னையை பயிரிடுவதாலும் இக்குறைபாடு தோன்றும்.
மேலாண்மை முறைகள் : நுண்ணூட்டச்சத்துக்களான போராக்ஸ், சிங்க் சல்பேட், மாங்கனீசு சல்பேட், காப்பர் சல்பேட் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலுமாக 225 கிராம் என்ற அளவில் எடுத்து அதனுடன் 10 கிராம் அம்மோனியம் மாலிப்பேட்டைக் கலந்து சுமார் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து மரத்திலிருந்து 1.5 மீட்டர் சுற்றளவுக்குள் ஊற்ற வேண்டும். இவ்வாறு வருடத்திற்கு இரண்டு முறை ஊற்ற வேண்டும். போதுமான அளவு பசுந்தாள் உரங்கள் அங்கக உரங்களை இடவேண்டும்.
மண் பரிசோதனை செய்து ஊட்டச்சத்து பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்ய வேண்டும். தோப்புகளில் களைகளின்றி பேண வேண்டும். காய்ந்த மட்டைகளை வெட்டும் போது பச்சை மட்டைகளுக்கு பாதிப்பு வராத வகையில் அகற்ற வேண்டும். அதிக வயதான மரங்களை அகற்றி விட்டு புதிய கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
- கொ.பாலகிருஷ்ணன்,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண்மைக் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மதுரை.

Source : Dhinamalar

No comments:

Post a Comment