Friday 29 May 2015

மண் பயன்பாடின்றி புதிய சாகுபடி முறை கல்லூரி மாணவர்கள் முயற்சி

மண் பயன்படுத்தாமல் புதிய சாகுபடி செய்யும் முயற்சியில் குமாரபாளையம் எக்ஸல் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
காளான் சாகுபடி போல எதிர்காலத்தில் பூமியை பயன்படுத்தாமல் இதன் மூலம் விவசாயம் செய்யலாமென அவர்கள்தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் மண்ணைப் பயன்படுத்தாமல், குறைந்த ஈரப்பதத்தில் சாகுபடி செய்யும் உயர் தொழில் நுட்ப முறையை உருவாக்கி உள்ளனர். 
இந்த தொழில்நுட்ப முறை குறித்து எக்ஸல் பொறியியல் முதல்வர் பழனிச்சாமி கூறியது:  விவசாய நிலத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, நீரை சிக்கனமாக பயன்படுத்தி சொட்டு நீர் பாசன அமைப்புக்கு விவசாயம் மாறி வருகிறது. இந்த சூழ்நிலையில், வேளாண் சாகுபடியில் முன்னேற்ற நிலையை அடைய, புதிய தொழில் நுட்பங்களை கண்டறிய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மின்னியல், மின்னணு பொறியியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் குறைந்த மண் வளத்தில் பயிர்கள் வளரும் ஹைட்ரோபோனிக்ஸ் சாகுபடி முறையை உருவாக்கியுள்ளனர். வழக்கமாக பயிர் சாகுபடியில் விளைச்சல் அதிகமாக கிடைக்க நீர்வளம், மண்வளம், தாது சத்துக்கள், காற்று உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.
மாணவர்கள் வடிவமைத்துள்ள இந்த புதிய முறையில் மண்வளம் இல்லாமல், குறைவான நீர் வளத்தை பயன்படுத்தி, ஊட்டச்சத்து பயிருக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.
ஹைட்ரோபோனிக்ஸ் முறையின்படி பயிரிடும் சூழலில் தட்ப வெப்ப நிலை, ஈரப் பதம், ஊட்டச் சத்து, குளிரூட்டும் முறை, வெப்பமூட்டும் முறை, வெளிச்சம் ஆகியவற்றை கட்டுப்படுத்த மின்னியல் முறையில் அமைந்த அளவீடுகள் உள்ளன. மேலும், சிறப்பு நுண்ணூட்டச்சத்து முறை பயன்படுத்தப்படுவதால் பயிர்கள் வேகமாக வளரும்.
இந்த ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் 7 வகைகள் உள்ளன. இதில், சொட்டு நீர் முறையைப் பயன்படுத்துகிறோம். இந்த முறையானது, வேளாண் தொழில் நுட்பத்தில் புதிய வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைட்ரோபோனிக்ஸ் முறை மூலம் இந்தியா முழு வளர்ச்சி பெற்ற நாடாக உருவாகும்.
இந்த திட்டத்தினை சிறிய அளவில் செயல்படுத்தினால் குறைந்தபட்ச முதலீடாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் மட்டுமே தேவைப்படுமென அவர்
தெரிவித்தார்.
இதற்கான ஆய்வுப்பணி கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறைத் தலைவர் அருள்முருகன் மேற்பார்வையில் மாணவர்கள் சதாசிவம், மணிமுத்து, சதீஷ்குமார், மணிகண்டன் ஆகியோர் செய்துள்ளனர்.
புதிய பயிர் சாகுபடி முறையை வடிவமைத்துள்ள மாணவர்களை எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன், துணைத் தலைவர் மதன் கார்த்திக், தொழில்நுட்ப இயக்குநர் செங்கோட்டையன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

Source : Dinamani

No comments:

Post a Comment