Tuesday 5 May 2015

ஆபத்து! : தென்னையை தாக்கும் கருத்தலை புழுவால்... : முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அழைப்பு

தர்மபுரி: தென்னை மரங்களில் கருத்தலைப் புழு தாக்குதல் காரணமாக, உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், மரங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அதை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என, வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில், மா, கரும்பு, மஞ்சள், தென்னை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, தர்மபுரி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியில், ஒன்பது ஆயிரத்து, 700 ஹெக்டேரில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், போதிய பருவமழையில்லாததால், தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், விவசாயிகளை மேலும் கவலை அடைய செய்யும் வகையில், மாவட்டம் முழுவதும் பரவலாக, கடந்த, சில மாதங்களாக, ஆயிரிக்கணக்கான தென்னை மரங்களில், கருத்தலைப் புழுக்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது.
இதனால், தென்னங்கீற்றுகள் பசுமை இழந்து காணப்படுவதுடன், தென்னை மரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அருகில் உள்ள மரங்களுக்கும், கருத்தலைப் புழு தாக்குதல் தீவிரமாக பரவி வருகிறது. தேங்காய்க்கு சந்தையில் நல்ல விலை கிடைத்து வரும் வேலையில், தென்னையில் தாக்குதல் ஏற்பட்ட காரணமாக தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேளாண்மை அலுவலர்கள் கூறியதாவது:
தென்னை மரங்களில், கருந்தலைப் புழு தாக்கப்பட்ட, கீழ் அடுக்கில் உள்ள தென்னங்கீற்றுக்களை வெட்டி எரித்து விடவேண்டும். புழு தாக்குதல் அதிகமாக இருக்கும் போது, ஒரு லிட்டர் தண்ணீரில், இரண்டு மில்லி டை குளோர்வாஸ் அல்லது, 5 மில்லி மாலத்தியான் மருந்தினை, ஒரு மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். புழுக்கள், மிக அதிகளவில் தாக்கப்பட்ட மரங்களின் நன்கு வளர்ந்த இளஞ்சிவப்பு நிறமுள்ள வேரினை சாய்வாக வெட்டிய பின், துளைகள் இல்லாத பாலிதீன் பையில், 10 மில்லி தண்ணீருடன், 10 மில்லி மானோகுரோடோபாஸ் மருந்தை கலந்து வேரில் கட்டிவிட வேண்டும்.மேலும், 25 நாட்களுக்கு பின், கருந்தலைப் புழுவின், புழு பருவத்தை கட்டுப்படுத்த, ஒரு மரத்திற்கு பிரகானிட், 20, பெத்லிட், 10 ஒட்டுண்ணிகளை வி ட வேண்டும். மேலும், 15 நாட்களுக்கு ஒரு முறை வீதம், ஐந்து அல்லது, ஆறு முறை ஒட்டுண்ணிகளை விடுவதன் மூலம், கட்டுபடுத்தலாம். மேலும், அருகில், வேளாண்மை விரிவாக்க மைய அலுவலத்தை தொடர்பு கொண்டு, தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.


Source: Dinamalar

No comments:

Post a Comment