Friday 29 May 2015

வேப்பூர் ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு மானிய விலை உலர்தீவன விற்பனை மையம் திறப்பு



வேப்பூர் ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட கால்நடைகளுக்கான மானிய விலை உலர்தீவன விற்பனை மையம் திறந்து வைக்கப்பட்டது.

உலர்தீவன மையம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட கால்நடைகளுக்கான மானிய விலை உலர் தீவன விற்பனை மைய திறப்பு விழா நடந்தது. விழாவில் சிதம்பரம் எம்.பி. சந்திரகாசி கலந்து கொண்டு உலர் தீவன மையத்தை திறந்து வைத்து, விவசாயிகளுக்கு கால்நடை தீவன அட்டையை வழங்கினார்.

விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் சகுந்தலா கோவிந்தன், வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணகுமார், புதுவேட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான கிருஷ்ணசாமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அப்சல், மோகன், உதவி இயக்குனர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கால்நடை தீவன அட்டை

இந்த மையத்தில் 1 கிலோ வைக்கோல் ரூ.2 வீதம் மானிய விலையில் வழங்கவும், ஒரு கால்நடைக்கு நாள் ஒன்றுக்கு 3 கிலோ வீதம் அதிகபட்சம் 5 கால்நடைகளுக்கு வாராந்திர தேவையின் அடிப்படையில் வாரம் ஒரு முறை 105 கிலோ என தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் வைக்கோல் பெற கால்நடை வளர்ப்போர் தங்களது ரேஷன் கார்டு நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கால்நடைகளின் இருப்பு விவரம் ஆகியவற்றை அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்தவர்களுக்கு கால்நடை தீவன அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை காண்பித்து வேப்பூர் உலர் தீவன கிடங்கில் மானிய விலையில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கான வைக்கோல் பெற்று கொள்ளலாம். வேப்பூர் கால்நடை மருந்தக வளாகத்தில் உள்ள உலர் தீவன கிடங்கின் மூலம் 33 கிராம ஊராட்சிகளில் உள்ள கால்நடைகள் பயன்பெற உள்ளன என்று கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அப்சல் தெரிவித்தார்.  Source : Dhinathanthi







No comments:

Post a Comment