Thursday 28 May 2015

நிலக்கடலையில் சுருள்பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? : வேளாண் துறை விளக்கம்

கறம்பக்குடி:  நிலக்கடலையில் சுருள்பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவ ட்டம், கறம்பக்குடி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலையில் சுருள் பூச்சித் தாக்குதலுக்கு வாய்ப்புள்ளது. இதை துவக்கத்திலேயே முறையான தொழில்நுட்பத்தை கையாண்டால் கட்டுப்படுத்தலாம் என்று கறம்பக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கறம்பக்குடி வட்டாரத்தில் தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக மானாவாரி நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சிகளின் தாக்குதல் ஏற்படக்கூடும். குறிப்பாக, வறண்ட வானிலை இருக்கும் போது சுருள் பூச்சிகள் அதிகமாக இருக்கும். அவை இலைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி சாப்பிட்டு உயிர் வாழும். இதனால் சுருள் பூச்சிகள் தாக்குதலுக்கு உள்ளான செடிகள் காய்ந்தும், சுருங்கியும் காணப்படும். புழு ஆரம்பத்தில் ஒரு நரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும்.

பின்னர் இலைகளை சுருட்டி அதனுள் வாழும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உரிய முறைகளை கடைபிடித்து கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக, தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை விளக்குப் பொறி வைத்து பூச்சிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். மேலும் அசாடிராக்டின் 500 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம். அல்லது குவினாள்பாஸ் 25. இ.சி-400, மைமெத்தோயேட் 30.இ.சி-250 மில்லி,குளோரிபைரிபாஸ் 20 இ.சி-500 மில்லி, லாம்டா சையகுலோத்தின் 5 இ.சி-80 மில்லி  இவற்றில் ஏதாவது ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார்.

Source : Dhinakaran

No comments:

Post a Comment