Tuesday 2 June 2015

பயிர்களுக்கு 125 வகையான பூச்சிக்கொல்லி தமிழக வேளாண் துறை அனுமதி

மதுரை:'தமிழக விவசாயிகளின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அனுமதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தலாம்' என வேளாண் துறை அனுமதி அளித்துள்ளது. இதற்காக 125 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.
'தமிழகத்தில் விளைவிக்கப்படும் பயிர்களில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் இருப்பதால் காய்கறிகளில் விஷத்தன்மை அதிகரித்து, அதை உண்பதால் புற்றுநோய் அபாயம் இருக்கிறது. பயிர்களில் பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்' என தமிழக அரசுக்கு, கேரள வேளாண் துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து செல்லும் காய்கறிகள் பரிசோதனைக்கு பிறகே கேரளாவில் விற்க அனுமதிக்கப்படுகிறது. பல இடங்களில் தமிழக காய்கறியை புறக்கணிக்கவும் ஆரம்பித்து விட்டனர். தமிழகத்தில் பயிர் விளைவிப்பில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

உழவியல், ஒழுங்கு நடைமுறை, இயந்திர முறை, மரபு சார்ந்த முறை, உயிரியல் முறை, ரசாயன முறை ஆகியவற்றின் மூலம் பூச்சிக்கட்டுப்பாடு குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.எனினும் விவசாயிகளுக்கு பொருளாதார சேத மடங்கிற்கு மேல் பூச்சித் தாக்குதல் இருந்தால், பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்த வேளாண் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி 62 வகையான பூச்சிக்கொல்லி மருந்து, 37 வகையான பூஞ்சான் கொல்லி மருந்து, 26 வகையான களைக்கொல்லி மருந்து என 125 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இவற்றின் தரம் குறித்து மாவட்ட அளவில் வேளாண் பரிசோதனை கூடங்களில் கண்டறியப்படுகிறது.

பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவு பொருட்களில் விஷத்தன்மை குறித்து கண்டறிய ஐதராபாத்தில் உள்ள மத்திய வேளாண் துறைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.எனினும் முழுக்க முழுக்க இயற்கை உரம், இயற்கையான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் இயற்கை விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு சான்று, விருது, ரொக்கப்பரிசுகளை தமிழக வேளாண் துறை வழங்கி வருகிறது.

Source : Dhinamalar

No comments:

Post a Comment