Tuesday, 2 June 2015

நிலத்தின் வளத்தை பெருக்கிட மண்ஆய்வு செய்ய வேண்டும்

பெரம்பலூர், :   பெரம் பலூர் வட்டார வேளாண்மைத்துறை துணை இயக்குநர் சேகர் தெரிவித்திருப்பதாவது :
அளவுக்கு அதிகமான ரசாயன உரத்தை பயன்படுத்துவதாலும், ஒரே சத்தை தொடர்ந்து பயன்படுத்துவதாலும் மண்ணின்வளம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே போகிறது. எனவே, மண்ணின் வளத்தை அறிய மண்மாதிரி ஆய்வு செய்வது முக்கியமாகும். மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்களின் அளவை அறியவும், களர், அமில, உவர் தன்மைகளை அறிந்து தகுந்த சீர்திருத்தம் செய்யவும், தேவைக்கேற்ப உரமிட்டு உரச்செலவை குறைக்கவும், அங்கக சத்தின் அளவறிந்து நிலத்தின் நிலையான வளத்தை பெருக்கிடவும் மண்ஆய்வு செய்யவேண்டும்.

இதற்காக ஒருஏக்கரில் குறைந்தது 10இடங்களில் மண்மாதிரி எடுக்கப்பட வேண்டும். ஆங்கில எழுத்து ‘ஏ” வடிவில் குழிகளை குறிப்பிட்ட ஆழத்தில் வெட்டி குழியின் இருபக்கங்களிலும் மேலிருந்துகீழ் வரை ஒரேசீராக அரைஅங்குல ஆழத்தில் மண்ணை வெட்டியெடுக்க வேண்டும். நெல், கடலை, கம்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு 15செ.மீ ஆழத்திலும் பருத்தி, கரும்பு, வாழை, மிளகாய், மரவள்ளி போன்ற பயிர்களுக்கு 22.5செ.மீ ஆழத்திலும், தென்னை, மா மற்றும் பழத்தோட்டப் பயிர்களுக்கு 30,60, 80செ.மீ ஆழத்தில் மூன்று மண் மாதிரிகளும் எடுக்க வேண்டும். வயலில் ஒருஇடத்தில் அரைகிலோவீதம் 10இடங்களில் 5கிலோ மண்மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.  சேகரிக்கப்பட்ட மண் ணை சீராக பரப்பி நான்கு சமபாகங்களாக பிரித்து, பிறகு எதிர்எதிர் மூலையில் இருபாகங்களிலும் உள்ள மண்ணை நீக்கிவிடவும். மீண்டும் மண்ணைப் பரப்பி முன்பு செய்ததுபோல் நான்கு சமபாகங்களாகப் பிரித்து வேறு எதிர்எதிர் மூலையில் உள்ள மண்ணை நீக்கிவிடவும். இப்படி பகுத்து பிரித்து சுமார் அரை கிலோ மண்ணை பாலித்தீன்பை அல்லது துணிப்பையில்கட்டி விபரத்தாள் இணைத்து ஆய்வுக்கு கொடுக்க வேண்டும். விபரத்தாளில் விவசாயின் பெயர், சர்வேஎண், பயிரிடப் போகும் பயிர், பயிரிடப்பட்ட பயிர்விபரம் குறிக்க வேண்டும். எரு குவித்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மரநிழல், வாமடைபகுதி மற்றும் நீர்கசிவு உள்ள இடங்களில் மண் மாதிரி எடுக்க கூடாது.

எனவே, மண்மாதிரி எடுக்கக் கூடாத இடங்களைத் தவிர்த்து, வயலின் நடுவில் அனைத்து இடங்களிலும் ஏக்கருக்கு 10எண்கள் வீதம் மண்மாதிரி சேகரிக்கவேண்டும்.      பெரம்பலூர் வட்டாரத்தில், நடமாடும் மண் ஆய் வுக்கூடம் மண்மாதிரி ஆய்வுமேற்கொள்ள வருகிற 2ம்தேதி ஈச்சங்காடு, நாரணமங்கலம், 3ம்தேதி இரூர், பாடாலூர், 4ம்தேதி நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், 5ம்தேதி மாவிலங்கை, கண்ணப்பாடி, 6ம்தேதி புதுஅம்மாபாளையம், டி.களத்தூர் பகுதிகளுக்கு வருகை தந்து மண்மாதிரி, நீர்மாதிரி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Source : Dhinakaran

No comments:

Post a Comment