Thursday 4 June 2015

வேளாண் கருவிகளை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம்


குறு, சிறு மற்றும் மகளிர் விவசாயிகள் மானிய விலையில் வேளாண் கருவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
வேளாண் தேவைக்கான பண்ணை இயந்திர சக்தியை அதிகரிக்கவும், குறைவான உற்பத்தி செலவில் அதிக மகசூல் பெறவும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.
வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், குறு, சிறு மற்றும் மகளிர் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
சிறு, குறு விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வேளாண் கருவிகளின் பயன்பாடு அனைவருக்கும் கிடைக்கும் வகையில், வேளாண் கருவிகளை நியாயமான வாடகையில் வழங்கும் வகையில், வாடகைத் திட்ட மையம் செயல்படவுள்ளது. இதற்கான உத்தேச மதிப்பீடு ரூ. 25 லட்சம். விவசாயக் குழுவினர் அல்லது தனிப்பட்ட விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் 40 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
காய்கனிகள், பழங்கள், வாசனைப் பொருள்கள் மற்றும் மூலிகைப் பொருள்களின் சேதத்தைத் தவிர்க்கும் வகையில் சூரிய சக்தி சோலார் உலர்த்திகள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உலர்த்தியை 400 சதுர அடி பரப்பில், ரூ. 3.97 லட்சம் உத்தேச மதிப்பில் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படும்.
விருப்பமுள்ள விவசாயக் குழுவினர், விவசாயிகள் தொடர்புடைய பகுதிகளில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை அணுகுமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Source : Dhinamani

No comments:

Post a Comment