Monday 1 June 2015

உளுந்து சாகுபடியில் பாதுகாப்பு முறை கடைபிடிப்பு விவசாயிகளிடம் வேளாண்துறை வலியுறுத்தல்

பழநி, : ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடித்தால் உளுந்து சாகுபடியில் எதிர்பார்க்கும் மகசூலை நிறைவாக பெறலாம் என விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.வடிகால் வசதியுள்ள நிலங்களில் உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த காலத்தில் நிறைந்த மகசூல் என்பதால் விவசாயிகள் பலர் இதை பயிரிடுவதில் ஆர்வம் செலுத்துகின்றனர். நடவின்போது கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பம் குறித்து பழநி வேளாண்மை துறையினர் கூறியிருப்பதாவது:செப்டம்பர், அக்டோபர் காலங்களில் வம்பன் 2,3,4 மற்றும் ஏ.பி.கே.1 ரகங்களை பயிரிடலாம். ஜனவரி, பிப்ரவரியில் டி.எம்.வி.1 ரகமும் பிப்ரவரி, மார்ச்சில் வம்பன் 4 மற்றும் டி.எம்.வி.1 ரகத்தை சாகுபடி செய்யலாம். எக்டேருக்கு 20 கிலோ விதை தேவைப்படும். இவற்றை துத்தநாக சல்பேட் கரைசலில் 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

அதன்பின்னர் நிழலில் உலர வைத்து ஒருமாதம் வரை இருப்பு வைத்து பயிரிடலாம். விதையுடன் 2 பாக்கெட் ரைசோபியம் உயிர் உரத்தை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும். மண் பரிசோதனை முறைப்படி செய்திருந்தால் அதன் தன்மைக்கேற்ப உளுந்து உட்பட அனைத்து பயிர்களையும் பயிரிட்டு தேவையான மகசூலை பெறலாம். அவ்வப்போது தழைச்சத்து, மணிச்சத்து உரங்களை இட வேண்டும். விதைக்கும் முன் கடைசி உழவில்  நுண்ணுரம் இட வேண்டும்.  உளுந்துக்கு 4 முறை நீர் பாய்ச்சினால் தேவையான மகசூலை எளிதாக பெறலாம். பூ மற்றும் காய் காய்க்கும் பருவங்களில் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிலம் ஈரப்பதமாக உள்ளதா என நாள்தோறும் கவனிக்க வேண்டும். இதுபோன்ற தொழில் நுட்பங்களை முறையாக கடைபிடித்தால் எளிதாக விவசாயிகள் எதிர்பார்க்கும் லாபத்தினை பெறலாம் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source : Dhinakaran

No comments:

Post a Comment