Wednesday 1 July 2015

தென்னை நார்கழிவு கம்போஸ்ட் உரம் தயாரிக்க வேளாண் அதிகாரி அறிவுரை


பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்ட சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்ட அறிக்கை: கம்போஸ்ட் உரம் தயாரிக்க, 100 கிலோ தென்னை நார்க்கழிவு, ஒரு டன் புளூரோட்டஸ், ஒரு கிலோ காளான்வித்து, ஐந்து கிலோ யூரியா வேண்டும். முதலில் தென்னை நார்க் கழிவை, 5, 3 மீட்டர் நீள அகலமுடைய மேடான நிலப்பரப்பில் சமமாக பரப்ப வேண்டும். அதன் மேல், 200 கிராம் புளூரோட்டஸ் காளான் வித்துகளை சீராக பரப்பி, அதன் மேல் தண்ணீர் தெளிக்க வேண்டும். தொடர்ந்து, 100 கிலோ தென்னை நார்க்கழிவை பரப்பி, ஒரு கிலோ யூரியாவை சீராக தூவ வேண்டும். மீண்டும் அதன் மேல் நன்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
இதே போல நார்கழிவு, புளூரோட்டஸ், காளான் வித்து மற்றும் யூரியா ஆகியவற்றை, 10 அடுக்குகள் வரும் வரை (ஒரு மீட்டர் உயரம்) மாற்றி மாற்றி அடுக்கி, ஈரம் காயாதவாறு தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். மூப்பது நாட்களுக்கு பின், இந்த கழிவானது கருப்பு நிறத்தில் மாறும். இதுவே, கம்போஸ்ட் உரமாக பயிர்களுக்கு பயன் படுத்தக்கூடிய மிகச்சரியான தருணம்.
இந்த உரத்தினால், தென்னை நார்கழிவில் உள்ள நார்ப் பொருட்கள் சிதைக்கப்பட்டு, எளிதில் பயிருக்கு கிடைக்கும் சத்தாக மாறுகிறது. கரிமம், நைட்ரஜன் ஆகியவற்றின் விகிதாச்சாரம், 112:1 லிருந்து 21:1 என்ற அளவுக்கு குறைக்கப்படுகிறது. இதனால், நைட்ரஜன் சத்து என்ற வீணாவது குறைந்து, பயிருக்கு பெருமளவில் கிடைக்கிறது, தழைச்சத்தின் அளவு, 0.26 சதத்திலிருந்து, 1.06 சதமாக அதிகரிக்கிறது.
மக்கிய கம்போஸ்டில் நுண் சத்துக்கள், முதன்மைச்சத்துக்கள் மற்றும் இரண்டாம் நிலை சத்துக்கள் அளவு அதிகமாக இருக்கும். இந்த கம்போஸ்ட் உரமானது மானாவாரி நிலங்களும், களர், உவர் நிலங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மண்ணின் பௌதீக மற்றும் வேதியல் தன்மைகளை பாதுகாக்கிறது, இந்த உரம், நிலத்துக்கு சத்துக்களை அளிப்பதுடன் மண்ணின் நீர் பிடிப்புத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. ஒரு ஏக்கருக்கு சாதாரணமாக, ஐந்து டன் தொழு உரம் இடும் இடத்தில், கம்போஸ்ட் உரத்தை, இரண்டு டன் இட்டாலே தொழு உரத்திற்கு இணையான மகசூலும், விளைபொருட்களின் தரமும், மண்ணின் வளமும் பாதுகாக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் கேடும் தவிர்க்கப்படுகிறது.
சேதுபாவாசத்திரம், பேராவூரணி வட்டாரங்களில் சாலை ஓரங்களில் குவியலாக கிடக்கும் தென்னை நார் கழிவுகளை மக்கச் செய்து, கம்போஸ்ட் உரமாக விவசாயிகள் பயன்படுத்தலாம்.


Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=1286398

No comments:

Post a Comment