Wednesday 1 July 2015

காய்கறி, பழ சாகுபடி மானியம் பெறவிவசாயிகள் தேர்வுக்கு சிறப்பு முகாம்



சிவகங்கை:""தோட்டக்கலை துறை மானிய திட்டத்தில் பயன் பெற பயனாளிகள் தேர்வு மற்றும் விண்ணப்பம் பெற ஜூலை 2ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும்,'' என சிவகங்கை தோட்டக்கலை துணை இயக்குனர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தோட்டக்கலைத்துறை மூலம் நடப்பாண்டு தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்நீர்பாசன, மானாவாரி பகுதி அபிவிருத்தி, அம்மா பண்ணை மகளிர் குழு, பெருநகர சுற்றுப்புற காய்கறி அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உள்ளது. இதில், மா, கொய்யா, பப்பாளி, எலுமிச்சை, முந்திரி, கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய் போன்ற வீரிய ஒட்டு காய்கறி பயிர்கள், மல்லிகை, சம்பங்கி பயிரிட மானியம் வழங்கப்படுகிறது.
இதற்காக நிழற்வலைக்கூடம், பசுமை குடில், பறவைதடுப்பு வலை, நிலப்போர்வை அமைக்கவும், டிராக்டர், பவர்டில்லர் ஆகிய பண்ணை இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்கப்படும்.
அனைத்து பயிர் சாகுபடிக்கும் சொட்டு நீர் பாசன கருவி அமைக்க சிறு, குறு விவசாயிக்கு 100 சதவீதம்,இதர விவசாயிக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும். மானாவாரி திட்டத்தில் மா சாகுபடி மற்றும் ஊடு பயிராக வெண்டை சாகுபடி, மண் புழு உர தயாரிப்பு கூடம் அமைக்க மானியம் தரப்படும்.
அம்மா பண்ணை மகளிர் குழுக்கள், பெருநகர காய்கறி அபிவிருத்தி திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பகுதியில் காய்கறி சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும்.
இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஜூலை 2ம் தேதி வட்டார அளவில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று மானிய விபரம், பயனாளிகளுக்கு தகுதி, வழங்க வேண்டிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.



http://www.dinamalar.com/district_detail.asp?id=1286256

No comments:

Post a Comment