Friday 17 July 2015

நிரந்தர உற்பத்தி, வளர்ச்சிக்கு விதையின் தரமறிந்து விதைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, :  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண்மையில் நிரந்தர உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு விதையின் தரம் அறிந்து விதைக்க வேண்டும் என வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் கண்ணன் மற்றும் நளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மையின் உற்பத்திக்கு விதை அடிப்படையான இடு பொருளாகும். உழவர்களுக்கு தரமான விதைகள் கிடைக்க செய்வதற்காக தமிழ்நாடு அரசு விதைச் சான்றளிப்புத் துறையின் கீழ் விதை சான்றளிப்பு, விதை ஆய்வு, விதை பரிசோதனை மற்றும் பயிற்சி ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றுள் புதுகை மாவட்ட விவசாயிகள் விதையின் தரத்தை அறிந்துகொள்ளும் வகையில், மாவட்டத்தில் 30, ராமலிங்கம் தெரு, திருக்கோகர்ணம் புதுகை என்ற முகவரியில் விதைப் பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது.

 விதையின் தரத்தை அறிய விதைப்பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பரிசோதனையில் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு கண்டறியப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. விதைச்சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983 உரிய முறையில் செயல்படுத்த விதை பரிசோதனை திட்டம் அவசியமானது. புதுகை விதை பரிசோதனை நிலையம் ஒரு அறிவிக்கப்பட்ட விதை பரிசோதனை நிலையமாக செயல்பட்டு வருகிறது.
 இப்பரிசோதனை நிலையத்தில் சான்று விதை, ஆய்வாளர் விதை மட்டுமல்லாமல் உழவர்களிடமிருந்தும், விற்பனையாளர்களிடமிருந்தும், விதை உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெறப்படும் பணி விதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்படுகின்றது. விதை பரிசோதனை முடிவுகள் தங்கள் இருப்பிடத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.

 வருகிற ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி பணிகள் துவங்கப்பட உள்ளது. எனவே, புதுகை மாவட்டத்தில் உள்ள காய்கறி சாகுபடியாளர்கள் விதை விற்பனையாளர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் தங்கள் கைவசம் உள்ள காய்கறி விதைகளை பரிசோதனை செய்து விதைப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். கத்திரி, மிளகாய், தக்காளி ஆகிய பயிர்களுக்கு 10 கிராம் விதையளவும், வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி ஆகிய பயிர்களுக்கு 100 கிராம் அளவில் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியே  துணிப்பையினுள் இட்டு சிப்பம் கட்ட வேண்டும். துணிப்பையினுள் முகவரி பயிர் மற்றும் தேவையான பரிசோதனை விபரங்களை கொண்ட விபரத்தாள் வைக்கப்பட வேண்டும். விதைப் பரிசோதனைக் கட்டணமாக ஒரு விதை மாதிரிக்கு ரூ.30 வீதம் செலுத்தி தரமறிந்து விதைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : dhinakaran

1 comment:

  1. Hellow sir mai ek blogger website developer hu maine apki site me bhoot si chize missing dekhi hai jaise ki apka theme achha nhi but agr aap yahi theme rkhna chatr hai to navbar ko hide kar dijiye layout se and theme me jake dropdown pe click karke mobile option ko desktop 🖥️ pe kar liye isse logo ko site visit krne me asani hogi log vahi dekhenge jo unko dekhna hai aur speed bhi badhega ahar aap chahe to hum apki site design kr skte hai dkkr5558@gmail.com

    ReplyDelete