Wednesday 1 July 2015

மண் பரிசோதனையால் அதிக மகசூல் பெறலாம்


19.jpg
மண் பரிசோதனை செய்து அதன்படி விளைநிலங்களுக்கு உரமிட்டு அதிக மகசூல் பெறலாம்.
 இதுகுறித்து மேற்கு ஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி கூறியதாவது:
 மண் பரிசோதனை செய்வதன் மூலம் விவசாயிகள் தங்களுடைய விளைநிலத்தின் மண் வளம், தன்மைகளைப் புரிந்துகொள்ள முடியும். எந்த வகையான தானியங்களைப் பயிர் செய்ய முடியும். என்ன வகையான உரமும், ஊட்டச் சத்தும் மண்ணுக்குத் தேவைப்படுகிறது போன்ற நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
 மண் அரிப்பு, மண் வளம் குன்றுதல் போன்றவற்றை அறிய மண் பரிசோதனை மிக அவசியம். 
 பயிர் அறுவடைக்குப் பிறகும் கூட நாம் மண் பரிசோதனை செய்வதன் மூலம் தற்போதைய மண்ணின் வளத்தை அறிய முடியும். பொருளாதார அடிப்படையில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் தேவைக்கு அதிகமான உரமிடுதலைத் தடுக்க முடியும். அதிகம் வருவாய் தரக்கூடிய பயிர்களைத் தெரிவு செய்து விவசாயம் செய்ய முடியும்.
 அனைத்து மாவட்டங்களிலும் மண் பரிசோதனை செய்துகொள்ள தமிழக வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. கிராம அலுவலர்களிடம் தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம். 
 மண் வள அட்டை: மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்து, மண்வள அட்டை பெற்று, அதிகாரிகள் ஆலோசனைபடி உரமிட்டால் அதிக மகசூல் பெறலாம்.
 விவசாயிகளின் நலன் மண்ணின் வளத்தைப் பொருத்தே அமைகிறது. பயிர் சாகுபடி செய்வதால் ஏற்படும் சத்துக் குறைபாடுகளைச் சரியான உர நிர்வாகத்தின் மூலம் சரிசெய்ய வேண்டியது அவசியம்.
 சரியான உர நிர்வாகத்துக்கு முதலில் மண் பரிசோதனையே அடிப்படையாகும்.
 சத்துகளின் அளவு வேறுபடுவதாலும், சத்துகளின் தேவை மாறுபடுவதாலும் மண் பரிசோதனையின் மூலமே பயிருக்கு ஏற்ப சரியான உர சிபாரிசு வழங்க முடியும்.
 அதன்மூலம் தேவையான அளவு மட்டுமே உரமிடுவதால் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெறுவதோடு அதிகப்படியான உரச்செலவையும் குறைக்கலாம். மண்ணின் தன்மைகளை அறியவும், களர், உவர், அமில நிலங்களை சீர்திருத்தவும் பயிருக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளின் அளவை அறிந்து அதற்கேற்ப உரமிடவும் மண் பரிசோதனை மிகவும் அவசியமாகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மண் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். நெல், சோளம், பயறுவகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய அந்த நிலத்தில் 15 செ.மீ. ஆழத்திலும், கரும்பு, வாழை, போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய 30 செ.மீ. ஆழத்திலும், பழந்தோட்டப் பயிர்களாக இருந்தால் 3 அடி ஆழத்திலும் மேல் மண்ணை தவிர்த்து விடமால் "வி' வடிவில் வெட்டி சரிவு மண்ணை அப்புறப்படுத்திய பின் "வி' வடிவில் மேலிருந்து மண்ணைச் சுரண்டி எடுத்தல் வேண்டும். ஒரு வயலில் சுமார் 10 முதல் 12 இடங்களில் எடுத்து நன்கு கலக்கி குவாட்டரிங் முறையில் அரை கிலோ வரும்படி ஒரு துணிப்பையில் எடுத்து கொள்ள வேண்டும். சேகரித்த மண் மாதிரிகளை தனித்தனியாகக் கட்டிச் சுத்தமான துணிப்பைகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ போட்டு உரிய அடையாளமிட்டு, விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் பெயர், சர்வே எண், அடையாளம், வட்டாரத்தின் பெயர், உர சிபாரிசு கோரப்படும் பயிர், பாசன நீரின் தன்மை, முன் சாகுபடி செய்த பயிர் போன்ற விபரங்களுடன் மண் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்ப வேண்டும்.
 விவசாயிகள் சரியான தருணத்தில் மண் சோதனை செய்து மண்வள அட்டை பெற்று கொள்ள வேண்டும். அந்த அட்டையில் பரிந்துரைத்துள்ளபடி உரமிட்டு அதிக மகசூல் பெறலாம் என்றார் சாந்தி. 
 
மண்-பரிசோதனையால்-அதிக-மகசூல/article2897205.ece

No comments:

Post a Comment