Monday 6 July 2015

மரவள்ளி கிழங்கு பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை வேளாண் அதிகாரி வழிகாட்டல்


தோகைமலை, : மரவள்ளி கிழங்கு பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி விளக்களித்துள்ளார்.
இது குறித்து தோகைமலை தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்திருப்பதாவது: தோகைமலை பகுதி விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் மரவள்ளியில் மஞ்சள் தேமல் நோய் பெருமளவில் பரவி வருவதால் விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மரவள்ளியில் தோன்றும் தேமல் நோய் ஜெமினி வைரஸ் எனப்படும் ஒரு வகை நச்சுயிரியால் உண்டாகிறது. இந்த நச்சுயிரியால் சுமார் 80 சதவீதம் வரை விளைச்சல் இழப்பு ஏற்படும். இந்த நோயால் இலையின் மேற்பரப்பில் மஞ்சள் நிறப் பகுதிகளும், பச்சைநிற பகுதிகளும் உண்டாகி தேமல் போன்ற தோற்றத்தை அளிக்கும். இந்த நோய் தாக்குதல் அதிகமாகும் பொழுது இலைகள் வடிவமிழந்து குறுகி, சிறுத்து சுருங்கி, உருமாறி தோற்றமளிக்கும். இந்த நோய் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈ என்ற பூச்சிகளால் பரவுகிறது. அதுவும் கோடைக்காலங்களில் இவ்வகை வெள்ளை ஈக் கள் சுறுசுறுப்பாக இயங்குவதால் இந்நோய் தாக்கம் அதி கமாக தென்படும். நோய் கண்ட செடிகளின் இலைகளிலிருந்து வெள்ளை ஈக்கள் இலைச் சாற்றை உறிஞ்சும் போது நச்சுயிரியின் துணுக்கள் ஈக்களின் உறிஞ்சு குழலில் ஒட்டிக்கொண்டு, பின்பு அதே ஈக்கள் நோயற்ற ஆரோக்கியமான செடிகளுக்கு சென்று இலைச்சாற்றை உறிஞ்சும் போது அந்த செடிகளுக்கும் நோய் பரவுகிறது.
இந்த வகை நோயை கட்டுப்படுத்த நோய் தாக்காத ஆரோக்கியமான விதை குச்சிகளை கவனமாக தேர்வு செய்து பயன் படுத்த வேண்டும். நோய் தாக்கிய செடிகளை அவ்வப்போது அகற்றி எரித்து வயலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தானே முளைத்து வளரும் மரவள்ளிச் செடிகள் இந்நோயை உண்டாக்கும் கிருமிக்கு, அடைக்கலம் அளித்து நோய் பரவக் காரணமாவதால் அவற்றை அழித்து விடவேண்டும். வரப்புகளில் வளரும் செடிகளையும் அகற்ற வேண்டும். மேலும் அறுவடைக்குப் பின் மரவள்ளியின் எஞ்சிய பாகங்களான வேர், சிறு கிழங்குகள், குச்சிகள் ஆகியவற்றை முழுவதும் அகற்றி விடவேண்டும். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஊடுருவிப் பாயும் பூச்சிக் கொல்லி மருந்துகளான மீதைல் டெமட்டான் அல்லது டைமித்தோயேட் போன்றவற்றை தெளித்து வயலில் வெள்ளை ஈக்கள் பரவுவதை கட்டுப்படுத்தலாம். மேலும் ஏக்கருக்கு 5 என்ற அளவில் மஞ்சள் நிற ஒட்டுப் பொறி வைத்து வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=468977&cat=504


No comments:

Post a Comment