Wednesday, 1 July 2015

மாற்றுப் பயிர் சாகுபடியில் வருமானத்தை அள்ளித் தரும் கனகாம்பரம்


18.jpg
மாற்றுப் பயிர் சாகுபடியில் விவசாயிகளுக்கு அதிக வருமானம் தரும் பயிர்களில் ஒன்றாக கனகாம்பரம் திகழ்கிறது. 
 புதுச்சேரி அரசு வேளாண் துறையின் கீழ் காலாப்பட்டு பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையத்துக்கு உள்பட்ட கனகசெட்டிகுளத்தைச் சேர்ந்த விவசாயி தனசேகரன், கனகாம்பரத்தை மாற்றுப் பயிராக சாகுபடி செய்தார். 
 இதில் குறைந்த நீர் மற்றும் நிலப்பரப்பில் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளார். மேலும், சந்தைப்படுத்துதலும் எளிதாக இருந்தாகவும் தனசேகரன் தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என வேளாண் அலுவலர் அனுப்குமார் தெரிவித்துள்ளார். 
 ரகங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, தில்லி கனகாம்பரம்.
 மண் மற்றும் தட்பவெப்பநிலை: 
 நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் மற்றும் செம்மண் ஏற்றது. மண்ணின் அமில காரத் தன்மை 6 முதல் 7.5க்குள் இருக்க வேண்டும். கனகாம்பரம் செடிகள் ஓரளவு நிழலைத் தாங்கி வளரும்.
 பருவம்: ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். மழைக் காலத்தில் நடக்கூடாது.
 நிலம் தயாரித்தல்: நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின் போது எக்டேருக்கு 25 டன் மக்கிய தொழு எரு இட்டு, மண்ணுடன் நன்கு கலந்துவிட வேண்டும். பின்னர் தேவைக் கேற்ப பார்கள் அமைக்க வேண்டும்.
விதையும் விதைப்பும்
இனப்பெருக்கம்: டெல்லி கனகாம்பரம் ரகத்தை வேர் வந்த குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.
 விதையளவு: 5 கிலோ/எக்டர் இடைவெளி: விதைக்காக பயிரிடுவதாக இருந்தால் 60 - 60 செ.மீ இடைவெளியைப் பின்பற்றவும். டெல்லி கனகாம்பரம் ரகத்துக்கு 60 - 40 செ.மீ. இடைவெளி.
 நாற்றாங்கால் தயாரித்தல்: தேவையான அளவுகளில் மேடைப்பாத்திகள் அமைத்து அவற்றில் ஒரு செ.மீ. ஆழத்தில் விதைகளை விதைத்து, பின்னர் அவற்றை மணல் கொண்டு மூடிவிட வேண்டும். 
 விதைகள் முளைக்கும் வரை தினமும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் விதைத்த 60-ம் நாளில் நடவுக்குத் தயாராகிவிடும்.
 நடவு செய்தல்: 60 நாள்கள் ஆன நாற்றுக்களைப் பறித்து, 60 செ.மீ. இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள பார்களில் நடவு செய்ய வேண்டும். நடும் முன் நாற்றுக்களை எமிசான் (1 கிராம் - லிட்டர்) கரைசலில் நனைத்து நடவேண்டும். நடவு செய்ய ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் வரையிலான பருவங்கள் ஏற்றதாகும். 
 நீர் நிர்வாகம்: 
 ஏழு நாள்களுக்கு ஒருமுறை நீர்பாய்ச்ச வேண்டும்.
 நிலத்தில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிலத்தில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் வேர் அழுகல் நோய் தோன்றக்கூடும். எனவே சீராக நீர்பாய்ச்ச வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
 அடியுரமாக எக்டேருக்கு 25 டன் தொழு உரம் கடைசி உழவின் போது இடவேண்டும். செடிகள் நட்ட மூன்று மாதங்கள் கழித்து எக்டருக்கு 75 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 125 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய ரசாயன உரங்களை இட வேண்டும். மேற்கண்ட உர அளவை மீண்டும் ஒவ்வொரு ஆறு மாத இடைவெளியில் கொடுக்க வேண்டும். 
 இவ்வாறு இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து இடவேண்டும். 
 உயிர் உரமாகிய அசோஸ்பைரில்லத்தை ஒரு எக்டேருக்கு 2 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். செடிகள் நட்ட மூன்று மாதங்கள் கழித்து அஸ்கார்பிக் அமிலம் 1,000 பிபிஎம் என்ற அளவில் தெளித்தால் மகசூல் அதிகரிக்கும். 
 தில்லி கனகாம்பரத்துக்கு: செடிகள் நட்ட 30 நாள்கள் கழித்து எக்டேருக்கு வேப்பம் புண்ணாக்கு 250 கிலோ, தழைச்சத்து 40 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். பிறகு 90 நாள்கள் கழித்து 40:20:20 கிலோ என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ராசயன உரங்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். 
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
 நூற்புழு: நூற்புழுக்கள் மண்ணில் இருந்தால் செடிகளின் வளர்ச்சி குன்றி இலைகள் வெளிறி மகசூல் பாதிக்கப்படும். நூற்புழு தாக்குதலைத் தடுக்க, நூற்புழு தாக்குதல் இல்லாத மண்ணில் கனகாம்பரம் சாகுபடி செய்ய வேண்டும். நிலத்தில் ஈரம் இருக்கும்போது செடிகளின் வேர் பகுதியில் போரேட் அல்லது கார்போப்யூரான் குறுணை மருந்தினை இடவேண்டும்.
 அசிவினிப் பூச்சிகள்: இவை இலைகளில் அடை அடையாக ஒட்டிக் கொண்டு சாற்றினை உறிஞ்சி சேதம் விளைவிக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த டைமித்தோயேட் மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்கவேண்டும்.
நோய்கள் 
 வாடல் நோய்: இந்நோயின் தாக்குதலினால் செடிகள் நுனிப் பகுதியிலிருந்து வாடி படிப்படியாக செடி முழுவதும் காய்ந்துவிடும். நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் எமிசான் மருந்தினை லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் கரைத்து செடிகளைச் சுற்றி வேர் பாகத்தில் ஊற்றிவிட வேண்டும்.
 அறுவடை: நாற்றாங்காலில் இருந்து செடிகள் நட்ட ஒரு மாதம் கழித்து பூக்க ஆரம்பித்து விடும். நன்கு மலர்ந்த மலர்களை இரண்டு நாள்களுக்கு ஒரு முறை பறிக்க வேண்டும்.
 மகசூல்: ஒரு எக்டேருக்கு ஒரு ஆண்டில் 2,000 கிலோ மலர்கள் கிடைக்கும். டெல்லி கனகாம்பரம் ரகம் ஒரு எக்டேருக்கு ஒரு ஆண்டில் 2,800 கிலோ மலர்கள் கொடுக்கும்.
மாற்றுப்-பயிர்-சாகுபடியில்-/article2897226.ece

No comments:

Post a Comment