Wednesday 17 June 2015

பறவை காய்ச்சல் முற்றிலும் தடுக்க பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வு



ஈரோடு : பறவை காய்ச்சல் மற்றும் இதர நோய்களை தடுக்க, கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு, மாதந்தோறும் விழிப்புணர்வு நடத்த கால்நடைத்துறை திட்டமிட்டுள்ளதாக, ஈரோடு கால்நடைத்துறை இணை இயக்குனர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், இணை இயக்குனர் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில், 400 பிராய்லர் கோழிப்பண்ணை, 80 முட்டை கோழிப்பண்ணை மற்றும், 500க்கும் மேற்பட்ட சிறு நாட்டுக்கோழி பண்ணைகள் உள்ளன. ஈரோட்டில் இருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களில் இருந்து, ஈரோடு மாவட்டத்துக்கு கோழிகள் வரத்து உள்ளன.கடந்த ஆண்டும், கடந்த மாதங்களிலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில், பறவைக்காய்ச்சல் நோய் தாக்கியதால், பல்லாயிரம் கோழிகள் இறந்தன. இதனால் பண்ணையாளர்கள் நஷ்டம் அடைந்ததுடன், தொழிலை நடத்தாமல் முடக்கி வைத்தனர்.அண்டை மாநிலங்களில் இருந்து வரும் கோழி வாகனங்களில், பறவை காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த, மருந்து தெளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.எனினும் பறவை காய்ச்சல் நோய் இல்லை. தொடர்ந்து பண்ணாரி, திம்பம், அந்தியூர் பகுதிகளில், சோதனை சாவடி அமைக்கப்பட்டு, தற்போதும் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணை உரிமையாளர்களுக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாதந்தோறும் பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்த, ஈரோடு கால்நடைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன் படி, பண்ணையில் பலியாகும் கோழிகளை, ஈரோடு கோழிகள் ஆய்வுக் கூட ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். அதன் மூலம், என்ன நோய் தாக்கி, கோழி இறப்புக்கு ஆளானது என்பது தெரிய வரும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment