Thursday 25 June 2015

மண் இல்லாமல் நீரில் பசுந்தீவனம் வளர்க்கும் மையம் திறப்பு


மாதவரத்தில் ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பசுமைக் குடில் வாயிலாக பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் மையத்தை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு.திலகர் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி பண்ணையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பசுந்தீவன உற்பத்தி மையத்தைத் தொடக்கி வைத்து அவர் பேசியதாவது:
 தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் செலவில் பசுமைக் குடில் மூலம் பசுந்தீவன உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 
 இந்த மையத்தில், மண் இல்லாமல் பசுமைக் குடில் வாயிலாக பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும்.
 பசுமைக் குடிலில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவனமானது, ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான சீரான தரம், சுவை, சத்துக்கள் நிறைந்து காணப்படும். கல், மண், தூசி, பூச்சி மருந்துகள் ஆகியவை இல்லாமல் இருக்கும்.
 இந்த மையத்தில் தேவைக்கு அதிகமான நீர் வீணடிக்கப்படாமல், மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. மண் இல்லாமல் நீரில் மட்டுமே கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் வளர்க்கப்படும்.
 ஒரு கிலோ தீவனம் உற்பத்தி செய்வதற்கு 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் போதுமானது. மாறாக, இதே தீவனத்தை நிலத்தில் உற்பத்தி செய்வதற்கு 80 முதல் 90 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
 தற்போது பசுந்தீவன உற்பத்தி, தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே சுமார் 65 சதவீத இடைவெளி உள்ளது. உற்பத்தியானது 40 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்கும் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
 அதன் ஒரு பகுதியாக, மண் இல்லாமல் நீரில் மட்டுமே பசுந்தீவனம் வளர்க்கும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 300 சதுர அடிப் பரப்பில் ஆயிரம் கிலோ பசுந்தீவனத்தைப் பசுமைக்குடிலில் உற்பத்தி செய்ய முடியும்.
 பசுமைக்குடிலில் வளர்க்கப்படும் பசுந்தீவனமானது, 7 அல்லது 8 நாளில் சுமார் 30 செ.மீட்டர் உயரம் வரை வளர்ந்துவிடும்.
 மக்காச்சோளம், கோதுமை, பார்லி, காராமணி போன்றவற்றை பசுமைக்குடில் முறையில் வளர்க்க முடியும். நீரியல் வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் தீவனமானது, மிகவும் சுவையாக இருக்கும். எல்லா மாதிரியான பருவநிலையிலும், கால்நடைகளுக்குத் தரமான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும்.
 இங்கு வளர்க்கப்படும் தீவனத்தை கால்நடைகள் விரும்பி உண்ணுவதன் மூலம் அடர் தீவனத்தின் அளவைப் பாதியாகக் குறைக்க முடியும். 
 விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
 இந்த முறையில் வளர்க்கப்படும் தீவனங்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.7 முதல் ரூ.8 வரை விற்பனை விலை நிர்ணயம் செய்துள்ளோம். மண்ணில்லா பசுமைக்குடில் வாயிலாக பசுந்தீவன உற்பத்தி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு 044-25551571 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment