Friday 17 July 2015

குழித்தட்டு முறையில் காய்கறி சாகுபடி பயிற்சி

கொள்ளிடம், :  நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சந்தப்படுகையில் தோட்டக்கலை பயிர் சாகுபடியாளர்களுக்கு உழவர் வயல்வெளிப்பள்ளி துவக்க விழா நடந்தது.ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஏஷான்பீவி தலைமை வகித்தார். கொள்ளிடம் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்வராஜ் வரவேற்றார். உழவர் வயல்வெளிப்பள்ளியின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் கணேசன் விளக்கினார். 
6 வாரங்கள் நடைபெறும் இப்பயிற்சி  வியாழக்கிழமை தோறும் நடைபெறும். முதல் நாளில் குழித்தட்டு முறையில் காய்கறி பயிர் நாற்றங்கால் அமைப்பது பற்றி செயல்விளக்கம் செய்து, அதன் பயன்கள் பற்றி நாகை தோட்டக்கலை அலுவலர் கண்ணன் விளக்கமாக எடுத்துரைத்தார். வரும் பயிற்சி நாட்களில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு, பசுமை குடில் அமைத்து காய்கறி சாகுபடி செய்தல் குறித்து விபரங்கள் தெரிவிக்கப்படும். உதவி தோட்டக்கலை அலுவலர் ஜான்கென்னடி நன்றி கூறினார். 

உழவர் பயிற்சி பள்ளிக்கான ஏற்பாடுகளை உதவிதோட்டகலை அலுவலர்கள் கல்யாணம், குமரேசன், முன்னோடி விவசாயி பன்னீர்செல்வம் ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் காய்கறி சாகுபடி செய்யும் 25 விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Source : Dhinakaran

நிரந்தர உற்பத்தி, வளர்ச்சிக்கு விதையின் தரமறிந்து விதைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, :  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண்மையில் நிரந்தர உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு விதையின் தரம் அறிந்து விதைக்க வேண்டும் என வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் கண்ணன் மற்றும் நளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மையின் உற்பத்திக்கு விதை அடிப்படையான இடு பொருளாகும். உழவர்களுக்கு தரமான விதைகள் கிடைக்க செய்வதற்காக தமிழ்நாடு அரசு விதைச் சான்றளிப்புத் துறையின் கீழ் விதை சான்றளிப்பு, விதை ஆய்வு, விதை பரிசோதனை மற்றும் பயிற்சி ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றுள் புதுகை மாவட்ட விவசாயிகள் விதையின் தரத்தை அறிந்துகொள்ளும் வகையில், மாவட்டத்தில் 30, ராமலிங்கம் தெரு, திருக்கோகர்ணம் புதுகை என்ற முகவரியில் விதைப் பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது.

 விதையின் தரத்தை அறிய விதைப்பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பரிசோதனையில் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு கண்டறியப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. விதைச்சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983 உரிய முறையில் செயல்படுத்த விதை பரிசோதனை திட்டம் அவசியமானது. புதுகை விதை பரிசோதனை நிலையம் ஒரு அறிவிக்கப்பட்ட விதை பரிசோதனை நிலையமாக செயல்பட்டு வருகிறது.
 இப்பரிசோதனை நிலையத்தில் சான்று விதை, ஆய்வாளர் விதை மட்டுமல்லாமல் உழவர்களிடமிருந்தும், விற்பனையாளர்களிடமிருந்தும், விதை உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெறப்படும் பணி விதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்படுகின்றது. விதை பரிசோதனை முடிவுகள் தங்கள் இருப்பிடத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.

 வருகிற ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி பணிகள் துவங்கப்பட உள்ளது. எனவே, புதுகை மாவட்டத்தில் உள்ள காய்கறி சாகுபடியாளர்கள் விதை விற்பனையாளர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் தங்கள் கைவசம் உள்ள காய்கறி விதைகளை பரிசோதனை செய்து விதைப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். கத்திரி, மிளகாய், தக்காளி ஆகிய பயிர்களுக்கு 10 கிராம் விதையளவும், வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி ஆகிய பயிர்களுக்கு 100 கிராம் அளவில் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியே  துணிப்பையினுள் இட்டு சிப்பம் கட்ட வேண்டும். துணிப்பையினுள் முகவரி பயிர் மற்றும் தேவையான பரிசோதனை விபரங்களை கொண்ட விபரத்தாள் வைக்கப்பட வேண்டும். விதைப் பரிசோதனைக் கட்டணமாக ஒரு விதை மாதிரிக்கு ரூ.30 வீதம் செலுத்தி தரமறிந்து விதைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : dhinakaran

முளைப்பு திறன் குறைந்தால் நெற்பயிர் மகசூல் பாதிக்கும் வேளாண் அலுவலர் ஆலோசனை :


கரூர்,: முளைப்பு திறன் குறைந்தால் பயிர் மகசூல் பாதிக்கும் என வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளார். கரூர் காந்திகிராமம் விதைப் பரிசோதனை ஆய்வக மூத்த வேளாண்மை அலுவலர் தாகூர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இடுபொருள் விதை, தரமான விதைகளை விதைப்பதன் மூலமே அதிக மகசூல் பெற முடியும். தரமான விதை என்பது விதைச்சான்று துறையினரால் பல கட்டங்களில் வயல்மட்ட ஆய்வு மற்றும் விதைப்பரிசோதனை செய்யப்பட்ட சான்று விதைகளே ஆகும். விதைப் பரிசோதனை நிலையத்தில் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன், பிறரக கலப்பு என 4 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

புறத்தூய்மை என்பது விதையின் சுத்தத்தை குறிப்பதாகும். அதில், களை விதைகள், பிற பயிர் விதைகள், உயிர்ப்பற்ற பொருள் ஆகியவை பரிசோதிக்கப்படுகிறது. ஈரப்பதம் என்பது பயிர் வாரியாக ஈரப்பதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதால் அதிக பூச்சி தாக்குதல் மற்றும் நுண்ணுயிர் தாக்குதலுக்கு உட்பட்டு தரம் குறைய வாய்ப்புள்ளது. முளைப்புத்திறன் பரிசோதனையின் விதை மாதிரிகளின் முளைப்புத்திறன் பரிசோதிக்கப்படுகிறது. ஒவ்வொரு விதைக்கும் குறிப்பிட்ட முளைப்புத்திறன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முளைப்புத்திறன் குறைந்தால் பயிர் எண்ணிக்கை குறைந்து மகசூல் பாதிக்கும். பிறரக கலப்பு என்பது ஒரே பயிரில் பல்வேறு ரக விதைகள் கலந்திருப்பது ஆகும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் பிறரக கலப்பு இருந்தால் விதைகள் விற்பனைக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. இதன் மூலம் வேளாண்மை துறையினரால் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் விதைகளுக்கும், தனியார் உற்பத்தியாளர்களின் விதைகளுக்கும், விதைப்பரிசோதனை அடிப்படையிலேயே சான்று அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தரமான விதைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய பரிசோதனை முடிவுகள் பயன்படுகின்றன.

விவசாயிகள், விதை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள விதைகளின் தரத்தை அறிய பகுப்பாய்வு முடிவுகள் பயன்படுகிறது. விதைப்பரிசோதனை ஆய்வுக்கட்டணமாக பணி விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.30மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை நேரிலோ அல்லது மணிஆர்டர் மூலமாகவோ வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், இரண்டாவது குறுக்குத்தெரு, திண்ணப்பா நகர், காந்திகிராமம் கரூர்4 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.பணி விதைமாதிரிகள் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு பகுப்பாய்விற்கு அனுப்பும் போது, விதை மாதிரியின் அளவு கம்பு, பனிவரகு, ராகி, முள்ளங்கி, கீரை விதைகள், எள் போன்ற சிறிய அளவிலான விதைகள் எனில் சுமார் 50கிராம் அளவுக்கு குறையாமலும், நெல், மக்காச்சோளம், உளுந்து, பயறு வகைகள் போன்ற பெரிய அளவிலான விதைகளாக இருந்தால் சுமார் 150 கிராமிற்கு குறையாமலும் அனுப்ப வேண்டும். விதை மாதிரிகளை துணிப்பை அல்லது பாலித்தீன் பைகளில் விதைகளை இட்டு பகுப்பாய்வு முடிவுகளுக்கு  அனுப்ப வேண்டிய முகவரி, பயிர் ரகம், குறியீட்டு எண், விதை அளவு ஆகிய விவரங்கள் அடங்கிய சீட்டை இணைத்து அனுப்ப வேண்டும் என கருர் விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் தாகூர் தெரிவித்துள்ளார்.
Source : dhinakaran

இன்றைய வேளாண் தமிழ் நாளிதழ் செய்திகள் :

Please visit the following link:
http://agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/july/17_july_15_tam.pdf

Agriculture related English news :


Please visit the following link:
http://agritech.tnau.ac.in/daily_events/2015/english/july/17_july_15_eng.pdf

Thursday 16 July 2015

இன்றைய வேளாண் தமிழ் நாளிதழ் செய்திகள் :


Please visit the following visit:
http://agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/july/16_july_15_tam.pdf

Agriculture related English news :


Please visit the following link:
http://agritech.tnau.ac.in/daily_events/2015/english/july/16_july_15_eng.pdf